சமீபத்தில் மாதம் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே ஏ.டி.எம்மில் இலவசமாக பணம் எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி திடீரென அறிவிப்பு ஒன்றை செய்து வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் ஐந்து முறைகளுக்கு மேலும் ஏடிஎம்களை இலவசமாக பயன்படுத வாடிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து சில தனியார் வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில், 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்மை பயன்படுத்தினால் வாடிக்கையாளரிடம் ரூ.20 கட்டணம் வசூலிக்கபடும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நடைமுறை கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதேநேரம், தனியார் வங்கிகள் விரும்பினால் 5 முறைக்கு மேலும் இலவசமாக ஏடிஎம்மை பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
வங்கி வாடிக்கையாளர்கள் எத்தனை முறை ஏடிஎம்மில் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்பட எந்த வங்கியும் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கட்டணம் வசூலித்தால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்கு வருவது அதிகரிக்கும் என்றும் இதனால், ஏடிஎம் பயன்பாட்டுக்கு இதுபோன்ற கட்டுப்பாடு விதிக்க தனியார் வங்கிகள் உள்பட பிரபல வங்கிகள் தயங்குவதாகக் கூறப்படுகிறது. பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வங்கிக்கு அதிக அளவில் வந்தால், ஊழியர்கள் அதிகம் தேவைப்படும் என்றும் அதற்கானசெலவு ரூ.20 ரூபாயைவிட அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, 5 முறைக்கு மேலும் இலவசமாக ஏடிஎம்களை பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து சில வங்கிகள் பரிசீலித்து வருவதாக தனியார் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
















