வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சென்னை சென்றடைந்துள்ளார். இருப்பினும் விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்காது அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிராநின் நினைவு தினம் நாளை மறுநாள் சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, ‘பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்‘ என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவாற்றுகிறார். ‘கண்ணபிரான் மற்றும் கண்ணபிரானுக்கு அப்பால்’ என்ற தலைப்பில் தென் ஆப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிபதியாக பணியாற்றிய சக்காரியா முகமது யாகூப் உரையாற்றவுள்ளார்..
இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் 9ம் திகதி தான் விக்னேஸ்வரன் சென்னை செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தனது பயணத்திட்டத்தை மாற்றினார் விஸ்னேஸ்வரன். அதன்படி இன்றே சென்னை சென்றுளார். வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் எதுவும் பேசாமல் விக்னேஸ்வரன் சென்றுவிட்டார். இன்னும் இரு நாட்களுக்கு அவர் சென்னையில்தான் தங்கியிருக்க உள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு மட்டுமே இம்முறை பயணம் செய்வார் என்றும், டெல்லிக்கு செல்லமாட்டார் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பயணத்தின் போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையோ, திமுக. தலைவர் மு.கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையோ விக்னேஸ்வரன் அதிகாரபூர்வமாகச் சந்திக்கமாட்டார் என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ஆனால், இரு நாட்களுக்கு முன்பே விக்னேஸ்வரன் சென்னை சென்றுள்ளதால் அவர் தமிழக அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பதுடன். வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற காலப்பகுதியில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி பலராலும் விமர்சிக்கப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















