இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மும்பையைச் சேர்ந்த 41 வயதான சச்சின் தெண்டுல்கரை விட அவரது மனைவி அஞ்சலிக்கு 6 வயது அதிகம். டாக்டரான அஞ்சலி, முதல் சந்திப்பிலேயே தெண்டுல்கர் மீது காதல் வயப்பட்டு விட்டார். அப்போது தெண்டுல்கருக்கு வயது 17. தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் வெளியீட்டு விழாவின் போது தங்களது ருசிகர காதல் ரகசியங்களை அஞ்சலி வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
எனது தாயாரை அழைத்து வருவதற்காக நான் மும்பை விமான நிலையத்திற்கு (1990-ம் ஆண்டு) சென்றிருந்தேன். அப்போது அங்கு சச்சின் தெண்டுல்கரும் வந்திருந்தார். கிரிக்கெட் பற்றி தெரியாததால் அவர் யார் என்று எனக்கு முதலில் தெரியவில்லை. எனது தோழி தான், ‘இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அற்புதமான ஒரு சிறுவன்’ என்று சொன்னார். உடனே நான், ‘செல்லம்போல ரொம்ப அழகாக இருக்கிறார்’ என்று கூறி கொண்டே அவரை நோக்கி சச்சின்…சச்சின் என்று சத்தமிட்டபடியே ஓடினேன். எனது தாயாரை அழைக்க வந்ததையே மறந்து விட்டேன். நான் அவரை நெருங்கியதும் ரொம்ப தர்மசங்கடத்திற்குள்ளான தெண்டுல்கர் என்னை சரியாக கூட அப்போது பார்க்கவில்லை.
பிறகு நான் அவருக்கு போன் செய்தேன். என்னை அஞ்சலி என்று அறிமுகம் செய்து கொண்டு, உங்களை விமான நிலையத்தில் பார்த்திருக்கிறேன் என்று கூறினேன். ஞாபகம் இருப்பதாக தெண்டுல்கர் சொன்னார். அப்படியென்றால் அந்த நேரத்தில் நான் என்ன உடை அணிந்திருந்தேன் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆரஞ்சு நிற டி-சர்ட்’ என்று சரியாக பதில் அளித்தார்.
எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்ட பிறகு உங்கள் வீட்டிற்கு வர விரும்புவதாக தெண்டுல்கரிடம் கூறினேன். ‘ஒரு பெண்ணை வீட்டிற்கு எப்படி அழைத்து செல்வது? இதற்கு முன்பு அப்படி யாரும் எங்கள் வீட்டிற்கு வந்ததில்லை. பெற்றோர் என்ன நினைப்பார்கள்?’ என்று தெண்டுல்கர் மிகவும் தயங்கினார். பிறகு பேட்டி எடுப்பதற்காக ஒரு பத்திரிகையாளர் போன்று வரும்படி கூறினார். அதன்படி பத்திரிகையாளர் தோற்றத்தில் அவரது வீட்டிற்கு முதல் முறையாக சென்று சந்தித்து பேசினேன்.
ஸ்டார் கிரிக்கெட் கிளப்புடன் இணைந்து தெண்டுல்கர் இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தார். நானும் அப்போது இங்கிலாந்தில் இருந்தேன். எனது தந்தை என்னிடம், ‘இந்திய அணி இங்கு விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் சதம் அடித்திருக்கிறான். அவனை சந்திக்க விரும்புகிறேன். நீயும் வா’ என்றார். அதற்கு நான், அந்த சிறுவனை சந்திக்க எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் எனக்கு கிரிக்கெட் மீது துளியும் ஆர்வம் கிடையாது. ஆனால் அப்போது அந்த சிறுவனை (சச்சின்) நான் சந்தித்து இருந்தால், 15 வயதில் இருந்தே அவரை துரத்த வேண்டியது இருந்திருக்கும்.
தெண்டுல்கர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் போது அவரை தொடர்பு கொள்ள சிரமமாக இருக்கும். அப்போது இ-மெயில், எஸ்.எம்.எஸ். வசதிகள் கிடையாது. டெலிபோன் பேச சர்வதேச கட்டணம் (ஐ.எஸ்.டி.) அதிகம். இரவு 10 மணிக்கு மேல் கட்டணம் குறைவு என்பதால், விடுதியில் இருந்து இரவில் தனியாக வெளியே சென்று பேசுவேன்.
தெண்டுல்கர் நியூசிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, டெலிபோன் செய்வதற்காக இருட்டில் 46 ஏக்கர் தைரியமாக நடந்து செல்வது உண்டு.
டெலிபோன் கட்டணத்தை மிச்சப்படுத்துவதற்காக தெண்டுல்கரை கடிதம் வாயிலாகவும் அதிகமாக தொடர்பு கொள்வேன்.
நியூசிலாந்தில் ஆடிக் கொண்டிருந்த போது, திருமணம் நிச்சயதார்த்தம் குறித்து அவரது பெற்றோரிடம் பேசும்படி என்னை வற்புறுத்தினார். பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதை விட திருமணம் குறித்து தனது பெற்றோரிடம் பேசுவதற்கு பயமாக இருப்பதாக கூறினார். பிறகு நான் சச்சினின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினேன்.
சாரா குழந்தையாக இருந்த போது, எனது வேலைப்பளுவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சச்சின் விரும்புவார். ஆனால் நான் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துபடி அறிவுறுத்துவேன்.
தெண்டுல்கரின் தந்தை இறந்த போது, அந்த தகவலை அவரிடம் தெரிவிக்க பட்டபாடு, எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்று.
இவ்வாறு அஞ்சலி கூறியுள்ளார்.
















