எம்சிசி கொடை உடன்பாட்டில் கையெழுத்திட மைத்திரி மறுப்பு

மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் நிதிக்கொடையை பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட அனுமதிக்க முடியாது என்றும், அதனை அடுத்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் எனவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் நிதிக்கொடையை பெறுவதற்கான உடன்பாட்டுக்கு அனுமதி கோரி, சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

நான்காவது முறையாக இந்த விவகாரம் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போதும், அதனை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார்.

ஆறு வாரங்களுக்கு முன்னர் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அதில் ஒப்பமிட மறுத்த சிறிலங்கா அதிபர், இதுகுறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கடந்தவாரம், இந்த விவகாரம் குறித்து ரணில் விக்ரமசிங்க நினைவுபடுத்திய போது, ஒருவார காலஅவகாசம் தேவை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தவாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அவர், தேர்தல்கள் நெருங்கியுள்ள நேரத்தில் இந்த உடன்பாட்டுக்கு அவசரப்படுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், புதிய அரசாங்கத்திடம் அதனைக் கையாளும் பொறுப்பை விட்டு விடுவதே சிறந்தது என்றும் தெளிவாக கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் இந்த இறுக்கமான முடிவினால், எம்சிசியின் இந்த நிதிக் கொடை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிதிக்கொடை தொடர்பான சந்தேகங்களை தீர்க்க அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!