எல்லோரும் கேக் வெட்டுவார்கள், நான் குப்பை வெட்டுகிறேன் : 60 வது பிறந்தநாளில் கமலுக்கு கிடைத்த பெருமை!

kamalதனது 60-வது பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகர் கமல் பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணையும் விதமாக சென்னை தாம்பரம் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது ரசிகர்களிடையே அவர் பேசியதாவது : மாண்புமிகு பிரதமர் அவர்கள் ‘க்ளீன் இந்தியா’ திட்டத்துக்கு நம்முடைய பெயரையும் உச்சரித்திருக்கிறார்கள். நான் என்னுடைய என்று சொல்லவில்லை, நம்முடைய என்று தான் சொன்னேன்.

இந்த 9 பேர் பெயர் பட்டியலில் தெற்கத்தியிலிருந்து என் குறிப்பிடக் காரணமாக இருப்பவர்கள் நீங்கள் தான். கடந்த 30 ஆண்டுகாலமாக இத்தனை ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனித்தனியாக சின்ன சின்ன குழுக்களாக நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்.

ரத்ததானம் கண் தானம், குப்பை மேடுகள், சாக்கடைகள் என இடுப்பளவு சாக்கடை தண்ணீரிலும் இறங்கி சுத்தம் செய்த எனது சகோதரர்களைக் கண்டு பெருமையடைகிறேன்.

தூய்மை இந்தியா திட்டத்துக்கான விதையை ஆரம்பத்தில் போட்ட விவசாயிகள் நீங்கள். உங்களுக்கு இந்தியாவைப் போல நானும் கடமைப்பட்டிருக்கிறேன். இது உங்கள் பணி மட்டுமல்ல, இந்தியாவின் பணி. இதில் கட்சி, மதம் பேதம் இல்லாமல் நாம் என்றும் செயல்பட்டு வருவது போல் இனியும் செயல்படுவோம்.

நமக்கு சாயங்கள் கிடையாது. நேயம் மட்டும் தான் பலம். அதற்கான ஒரு சான்றிதழைத் தான் தேசம் நமக்குக் கொடுத்திருப்பதாக நாம் நம்ப வேண்டும்,

எக்கட்சியும், எம்மதமும் யாராக இருந்தாலும் மனிதர்கள் அந்தக்குழுவில் இருக்கும் வரை நாம் நேயத்துடன் சேவை செய்வோம் என்பதை இத்தனை காலமாக நாம் காட்டிக்கொண்டிருந்ததைப் போல் நாம் இனியும் காட்டுவோம்.

இதைப்போல இன்னும் நிறைய ஏரிகளை நாம் சுத்தம் செய்ய வேண்டும், இது பேராசை இல்லை. ஏனென்றால் நாம் தனி மரம் அல்ல, தோப்பு. என்றார் கமல்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார் அப்போது அவர் கூறியதாவது :

மக்களின் அன்பு, இத்தனை கேமராக்கள் என்னை திரும்பி பார்க்கும் என்று நான் நினைத்தே பார்த்ததில்லை. ஒரு கேமரா என்னைப் பார்க்காதா என்று நான் ஏங்கிக் கொண்டிருந்தேன்.

கூட்டத்தில் முகமில்லாமல் இருந்த எனக்கு முகமும் கொடுத்து, முகவரியும் கொடுத்த இந்த தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ரஜினி அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். என்பேரு என்னன்னு கேட்டா என்னால சொல்ல முடியும். திடீர்னு ஒருத்தரை கைகாட்டி அவர் பேரு என்னன்னு கேட்டா என்னால சொல்ல முடியாது.

நான் நடித்த மூன்று படங்களில் முதலில் உத்தம வில்லன் படம் தான் ரிலீசாகும், விஸ்வரூபம் 2 எப்போது ரிலீசாகும் என்பதை தயாரிப்பாளர் சொல்லாமல் என்னால சொல்ல முடியாது.

வழக்கமாக பிறந்தநாள் என்றால் எல்லோரும் கேக் வெட்டுவார்கள், நான் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். பெருமை இருக்கிறது. அதைப் பெருமையாகவும் நினைக்கிறேன். ஏனென்றால் நாடு சுத்தமாகும் விஷயத்தில் நானும் பங்குபெறுகிறேன் என்பதால் என் பிறந்தநாள் இன்னும் மேலும் சிறப்படைகிறது இவ்வாறு கமல் பேசினார்.

Tags: , ,

Leave a Reply