புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலங்கை விஜயத்தின் போது நடைபெறும் பிரார்த்தனை வைபவங்களுக்கு லட்சக்கணக்கில் மக்களைத் திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கை வரும் புனித பாப்பரசர் பிரான்சிஸ், 14ம் திகதி காலை காலிமுகத்திடலில் பிரார்த்தனை வைபவமொன்றை நடத்தவுள்ளார்.
இந்த வைபவத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் அளவிலான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று மன்னார் மடுவில் அமைந்துள்ள பேராலயத்தில் பாப்பரசரின் பிரார்த்தனை வைபவம் 14ம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.
இதிலும் வடக்கில் வாழும் கிறிஸ்தவர்களில் இருந்து குறைந்தது ஐந்து லட்சம் பேரளவிலாவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாப்பரசரின் பிரார்த்தனைக் கூட்டங்களில் பெருமளவான பொதுமக்களின் வருகையை உறுதிப்படுத்துவது தொடர்பில் மறைமாவட்டங்கள் வழியாக அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாப்பரசரின் வருகையின் போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
கொழும்பு பேராயர் அலுவலக ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினியை மேற்கோள் காட்டி திவயின பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
















