சந்திரிக்கா பண்டாரநாயக்க, கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர் பொது வேட்பாளராக போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து சில எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகித்து வரும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் எனவும் இவர் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் பேசப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவாளர்கள் பலர் இந்த அமைச்சரை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது இந்த அமைச்சர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பல எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவு வழங்க விருப்பம் வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் பெரும்பான்மையானவர்கள் குறித்த அமைச்சருக்கு ஆதரவு வழங்குவது பற்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பிக்கையான தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது
















