பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டியின்போது, அமலன் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10ஆவது சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நிதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே 10ஆவது சந்தேகநபரான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன், இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற பொன் அணிகள் போரின் போது, பழைய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான ஜெயரட்ணம் தர்ஷன் அமலன் (வயது 23) என்ற இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில், ஏற்கனவே 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 10ஆவது சந்தேகநபர், தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதல் 9 சந்தேகநபர்கள் மற்றும் சரணடைந்தவர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார்.
















