ஆயுதக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்றிற்கு விளக்கமளிக்குமாறு கோதபாயவிற்கு சமால் உத்தரவு

chamalஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பாராளுமன்றிற்கு விளக்கமளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு, சபாநாயகர் சமால் ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்தமை தொடர்பில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென சபாநாயகர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்திய பாராளுமன்றில் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகத் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

பதினொரு மாதங்களுக்கு முன்னதாக இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும், நான்காவது தடவையாகவும் இது குறித்து கேள்வி எழுப்பிய போதும், பதிலளிக்க ஒரு மாத கால அவகாசத்தை ஆளும் கட்சியின் பிரதம கொறடா கோரியுள்ளதாகவும் தலதா அத்துகோரல சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

எந்தக் காலப்பகுதியில், என்ன ஆயுதங்கள், எந்த அடிப்படையில், எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த வெளிப்படையான ஆவணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்னவிடமே இந்தக் கேள்வியை தலதா எழுப்பியிருந்தார்.

இதன் போது, குறித்த கேள்விக்கு உடனடியாக பதிலளிக்குமாறு சபாநாயர் சமால் ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, தூய பௌத்த நாடான இலங்கையில் ஆயுதம் விற்பனை செய்வதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றதா என தலதா அத்துகோரல கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை ஓர் தூய்மையான பௌத்த நாடு எனவும், கௌதம புத்தர் பிறந்த நாடான இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வழியமைக்க வேண்டாம் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply