வடக்கில் தமிழர் காணிகளை இராணுவம் பிடித்து வைத்திருக்கிறது! அதிகாரம் அற்ற மாகாணசபை! இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகள் நாடு திரும்பவேண்டும்! வடக்கு முதல் அமைச்சரின் இடக்கு முடக்கான பேச்சுகள்!
மேலே நான் சொன்ன அத்தனையும் நான் இங்கே எழுதியவை அல்ல. எமது வடக்கு முதல் அமைச்சரின் பேச்சுகளின் சாரம்தான் இவை!
இந்தியாவில்-தமிழ் நாட்டில் அவர் பேசிய உரையின் சுருக்கம்தான் இவை..! ஆனால் அவர் சொல்ல மறந்தவை இன்னும் அநேகம் உண்டு!
கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்களில் இன்னும் கணிசமான தொகையினர், ஏதிலிகள் ஆகவே புறாக்கூடுகளில் வாழ்கிறார்கள்..!
இராணுவம் வடக்கில் இன்னும் பழையபடி குவிக்கப் பட்டிருக்கிறது. அவர்களை குறைத்துவிட்டோம் என்று சிங்கள அரசு சொல்கிறது. ஆனால், அது வெறும் வாய்ப்பேச்சுத்தான்! குறைக்கப் படவே இல்லை! குறைக்கப் பட்டிருப்பது தமிழர்களின் தலைகள்தான்! ஒரு இலட்சம் தமிழ் விதவைகள் அங்கே உள்ளனர் என்று வடக்கு முதல் அமைச்சரின் பேச்சு உண்மையைச்சொல்கிறது.
ஆனால் அவர்களை விதவைகளாக்கிய வீணர்கள் அந்த மண்ணில்தான் இன்னும் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்!
அதை ஏன் சொல்ல மறந்தார்?
இராணுவம் பிடித்திருந்த தமிழர் காணிகளில், இராணுவமே ‘கோல்ப்’ விளையாடுகிறது. ‘டென்னிஸ்’ விளையாடுகிறது..!
இதுதான் அதிகப்படியான முன்னேற்றங்கள்..!
ஆனால் தமிழ்ச்சிறுவர்களோ இன்னும் அந்த மண்ணில் பனம்பழம் பொறுக்கிப்பசியாற ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்! கோவில்கள் புதிதாய் அந்த மண்ணில் கட்டப்பட்டுள்ளன. ஆனால், சைவக்கோவில்கள் அல்ல. புத்த கோவில்கள்!
முதல் அமைச்சரின் குடும்பத்துக்குள்ளும் புத்தர்கள் உள்ளனர் என்பதால்தான் அதை பற்றி அவர் குறிப்பிடவில்லைப்போலும்? முல்லைத்தீவு மாவட்டம் முதல் யாழ் மாவட்டம் வரை சிங்களக்குடியேற்றங்கள் தூள் கிளப்புகின்றன ..!
ஆனால் அதுபற்றி எந்த பேச்சும் முதல் அமைச்சரின் உரையில் இல்லை. சொல்ல மறந்துவிட்டாரோ தெரியாது?
‘யாழ்தேவி பழையபடி ஓடுகிறது. ஆனால் அந்த யாழ்.தேவியின் கலாசாரம் எங்கே ஓடிவிட்டது? பண்பாடு எங்கே ஓடிவிட்டது? பதில் சொல்ல முடியாத கேள்விகள் இவை..!
மகாவலி கங்கை நிச்சயம் வடக்கில் வர வாய்ப்பில்லை. வடக்கே அதை திருப்பவும் சிங்களவர்கள் விடமாட்டார்கள்! ஆனால், வடக்கில் மது கங்கை ஓடுகிறது..! இதைவிட பெரிய கங்கை உலகில் எது உண்டு?
சொல்ல மறந்த நல்ல செய்திகளில் இதுவும் ஒன்றாகி விட்டது போலும் முதல் அமைச்சருக்கு?
காணாமல் போனோரின் பட்டியலை சிலர் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் எப்படி காணாமல் போனார்கள்? எங்கே காணாமல் போனார்கள்? யாரால் காணாமல் போனார்கள்? என்பது பற்றிய கேள்விகளுக்கு முதல் அமைச்சரின் உரையில் பதில் இல்லை..!
அதிகார பரவலாக்கல் என்பதை ஒற்றை ஆட்சி முறை கொடுக்காது என்று அடித்துச்சொல்கிறார் முதல் அமைச்சர்..!
ஆளுனரை முதன்மைப்படுத்தும் மாகாண முறை ஆட்சி. ஆளுநரின் கையில் படை அதிகாரம் என்பது இருக்கும் வரை முதல் அமைச்சரும் இலங்கை அரசின் ஊதுகுழல் ஆகத்தான் இருப்பார். இருக்கிறார். இருக்கிறேன்..! என்பதை கணேசர் ஐயா சொல்ல மறந்தது ஏன்?
அடுத்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழ் நிலையில் ஓர் எழுதப்படாத சிறைக்கூண்டுக்குள் இந்தியாவில் வாழும் ஈழ ஏதிலிகளை அங்கே வந்து குடியேறுங்கள் என்று வடக்கு முதல் அமைச்சர் பூ தூவி ஏன் வரவேற்கிறார்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அப்படி அழைக்கிறார்..? புரியவில்லை..?
நாலாம் மாடிக்கு அவர்களில் பலர் போகாமல் இருப்பதற்கு முதல் அமைச்சர் உத்தரவாதம் அளிப்பாரா? அல்லது அவரே கூட எந்த வேளையிலும் நாலாம் மாடிக்கு விசாரணைக்கு போகாமல் இருக்கத்தான் போகிறாரா?
தேர்தலில் தமக்கு-தமது கட்சிக்கு ஆதரவான வேட்பாளருக்கு வாக்களிக்கவா ஐயாவின் அழைப்பு..? அல்லது சர்வதேச மனித அமைப்பின் முன்னிலையில் அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவிருக்கும் இலங்கை பற்றிய இன அழிப்பு கூட்டத்தில் ஈழத்தில் போருக்கு பின்னர் ஜனநாயகம் தழைத்து வாழ்கிறது. ஏதிலிகளாக போனவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். வடக்கில் சமாதானப்புறாக்கள் வானில் சிறகடித்துப் பறக்கின்றன என்று கூறும் ராஜபக்சாக்களின் பேச்சுக்கு வலு சேர்க்க விரும்புகிறாரா ஐயா ?
புரியவில்லை! இடக்கு முடக்காக ஒன்றுக்கு பின் ஒன்று முரணான கருத்துகளை கூறும் அழகு, ஓர் முதல் அமைச்சருக்கு இருப்பது ஆரோக்கியமான அரசியலா..?
வடக்கு தமிழர்கள், இன்று வேண்டுவது சுதந்திரமான நிம்மதியான வாழ்வை..! அதை முழுமையாக கொடுக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு அரச பதவி ஏன்? ஆட்சிக் கட்டில் ஏன்..? பதவி பன்னாடைகள் ஏன்?
பதில் கூறுங்கள் முதல் அமைச்சர் அவர்களே !
வெளி நாட்டில் இருந்து கொண்டு எதைவேண்டுமானாலும் பேசுவது சுலபம். உள் நாட்டில் உங்கள் இருப்பிடத்தை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அது போதும் இப்போது!
=மு.வே.யோகேஸ்வரன்=
நன்றி,
-வெளிச்சவீடு-
















