வவுனியா பண்டாரிக்குளம் முனியப்பர் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள “யூனியஸ்” பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மழலைகளின் மனவளக்கலையை வெளிப்படுத்தும் ஆக்கத்திறன் படைப்புகள், கடந்தவாரம் முன்பள்ளி கல்வி மேம்பாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளினதும், பொதுமக்களினதும் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.
அங்கு விருந்தினர்களை மங்கலகரமாக வரவேற்பதற்காக களிமண் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த நிறைகுடம் – குத்துவிளக்கு ஏற்பாடும், சிரட்டைகள் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த திருநீற்று சந்தனத்தாங்கியும், பொருள்காட்சிக்கூடத்தின் முகப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை விருந்தினர்களை பெரிதும் கவர்ந்து ஈர்த்தன.
சணல் மூலம் உருவாக்கப்பட்ட அணில்,
சிற்பிகள், மரப்பட்டைகள், தானியங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஆமை, முதலை, பாம்பு, வண்ணத்துப்பூச்சி,
குளிர்பான போத்தல் மூடிகள் மற்றும் அப்பிள் பழம் பாதுகாப்புறை (பொஞ்ச்) கொண்டு உருவாக்கப்பட்ட சட்டை, அன்னாசிப்பழம்,
தும்புகள் கொண்டு உருவாக்கப்பட்ட தேங்காய்,
நூல் கொண்டு வரையப்பட்ட வரிக்குதிரை,
சவர்க்காரம் மற்றும் கழிவுத்துணிகள் கொண்டு உருவாக்கப்பட்ட சிங்கம்,
காய் கறிகளை கொண்டு உருவாக்கப்பட்ட பறவைகள், விலங்குகள்,
சிரட்டைகள் கொண்டு உருவாக்கப்பட்ட அடுக்குத்தட்டு விளக்கு மற்றும் ஆமை,
றெஜிபோர்ம் கொண்டு உருவாக்கப்பட்ட யேசுகிறிஸ்துவின் கல்வாரி உறைவிடம்,
வத்திக்குச்சி துண்டங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பூக்கொத்து,
குளிர்பானம் அருந்தும் ஸ்ரோ கொண்டு உருவாக்கப்பட்ட பூக்கூடை,
இயற்கையோடு பின்னிப்பிணைந்து வடிவமைக்கப்பட்டிருந்த ஏரிக்கரைகுளம்,
என்பன “கண் பார்த்தால் கை செய்யும்” எனும் தமிழ்ப்பழமொழிக்கு கட்டியம் கூறின.
குறித்த பாலர் பாடசாலை மழலைகளின் இரசிப்புத்தன்மை மற்றும் படைப்பாக்கத்திறனை விருந்தினர்களும், பார்வையாளர்களும் வெகுவாக மெச்சிப்பாராட்டினர். ஆசிரியர்கள் திருமதி கலைவாணி மனோகரன், திருமதி நீரஜா விஜிந்தன் ஆகியோர் மழலைகளை நெறிப்படுத்தி வளப்படுத்தியிருந்தனர்.



















