பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?

பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதாக பேஸ்புக்கில் வைரலாகும் புகைப்படம் குறித்து பார்ப்போம்.

மலைப்பிரதேசமான உத்தரகாண்டில் அடிக்கடி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்த நிலையில், நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை ஒன்று காப்பாற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மீம்ஸ் வடிவில் பேஸ்புக்கில் பதியப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் “பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தி மக்களின் உயிரைக் காப்பாற்றிய யானை” என குறிப்பிடப்பட்டிருந்தது. பேஸ்புக்கில் வைரலான அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது இந்தியாவில் நடக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த புகைப்படம் கடந்த 2007-ம் ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சிடிர் என்ற புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது சேற்றில் சிக்கிய பேருந்தை யானை மூலம் மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. இதன்மூலம் இது உத்தரகாண்டில் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.

போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!