கரூரில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வர் பெயரை அமைச்சர்கள் யாரும் கூறவில்லை. கரூரில் பள்ளிக் கல்வி துறை சார்பில் தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் தனியார் பள்ளி கூட்ட அரங்கில் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் 10 ,12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 220 பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டது. இக்கிண்ணமானது, அதிமுகவின் கட்சி சின்னமான இரட்டை இலை வடிவில் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புறையாற்றிய பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, போக்குவரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில் ஒரு முறை கூட தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை. நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரை வார்த்தைக்கு வார்த்தை மக்களின் முதல்வர் என்றும் தமிழக முதல்வர் எனவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
















