அய்யா…என் நிலத்தை காணவில்லை: புகார் கொடுத்த மூதாட்டி !!

land_missingசிக்மகளூரில் மூதாட்டி ஒருவர் நிலத்தை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ள ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. சிக்மகளூர் திப்புநகரை சேர்ந்தவர் இலஞ்சியம்மா ( 65). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ‘எனக்கு சொந்தமாக நிலமோ, வீடோ இல்லை. இதனால் அரசு சார்பில் எனக்கு நிலம் ஒதுக்கி அதில் மானிய விலையில் வீடு கட்டித் தர வேண்டும்’ என்று கோரிக்கை மனு ஒன்றை சிக்மகளூர் நகரசபை அதிகாரியிடம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, நகரசபை அதிகாரிகள் சிக்மகளூர் இந்திராநகர் பகுதியில் அரசு சார்பில் வீடு கட்ட தேவையான நிலத்தை இலஞ்சியம்மாவுக்கு ஒதுக்கி கொடுத்தனர்.

அந்த நிலத்தில் வீடு கட்ட ஆகும் செலவில் 50 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கும் என்றும், மீதி 50 சதவீத பணத்தை இலஞ்சியம்மா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இலஞ்சியம்மாவிடம் போதிய அளவில் பணம் இல்லாததால், வீடு கட்டும் பணியை உடனே தொடங்காமல் கிடப்பில் போட்டார். வீடு கட்டுவதற்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்து விட்டு, பணியை தொடங்குவது என்று முடிவு செய்தார்.

இந்நிலையில், போதிய பணத்தை ஏற்பாடு செய்த இலஞ்சியம்மா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகரசபை சார்பில் இந்திராநகரில் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பார்க்க சென்றார். ஆனால், அந்த நிலத்தில் இன்னொருவர் வீடு கட்டி இருந்தார். இதுகுறித்து இலஞ்சியம்மா நகரசபை அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், எனது நிலத்தை காணவில்லை. அதை விரைவில் கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து நகரசபை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: , ,

Leave a Reply