பல்கலைச் சூழலில் இராணுவக் குவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாது- யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

army-jaffnaயாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் நிறுத்தப்பட்டமையானது மாணவர் மத்தியில் பெரும் அச்ச நிலையில் தோற்றுவித்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சிலவாரங்களாக பல்கலைக்கழக பிரதான வாசலில் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். மாவீரர் வாரம் நெருங்கும் வேளையில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இராணுவம் நிலை கொண்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல பல்கலைக்கழக சமூகத்திற்கும் பெரும் அச்ச நிலையினை உருவாக்கி உள்ளது. பல்கலைக்கழக சூழலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும் போது தான் மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும். அண்மைக் காலங்களாக பல்கலைக்கழகத்தில் எந்த விதமான குழப்பமான சூழ்நிலையும் நிலவவில்லை.

அவ்வாறான ஒரு நிலையில் பல்கலைக்கழக பகுதியில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டமையானது பாரிய ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துயுள்ளது. எனவே பல்கலைக்கழக சூழலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக சூழலில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டமை தொடர்பாக யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் மல்லவராட்சியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, விசேட உத்தரவுக்கு அமைய யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவம் நிலை நிறுத்தப்படவில்லை. இது ஒரு வழமையான நடவடிக்கையே. சில இடங்களில் தேவை கருதி இராணுவத்தினரை நிலை நிறுத்துவது வழமை. அது போன்றே யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply