நாட்டில் தற்போது இன்னொரு ஆயுதப் போராட்டத்தின் அவசியம் எழுந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம் நடத்திய காலங்களை விட நாடு இன்று பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு மொத்தமாக தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ராஜபக்ச குடும்பத்தினர் இன்னும் பல நூற்றாண்டுகள் அபிவிருத்தியில் பின்தங்கி இருக்கச் செய்யும் வகையில் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது.
1980 காலப்பகுதியை விட மோசமான அழிவுப் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் இதனை மீட்டெடுக்க இன்னொரு போராட்டம் தேவை என்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய ஜனாதிபதி அதனை பகிரங்கமாக மீறிக் கொண்டிருக்கின்றார். எனினும் அதனை குறித்து எழுத ஊடகங்கள் அச்சப்படுகின்றன, நாட்டின் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து வகையான வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, நாடு சீரழிந்துவிட்டது. இதனை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பொறுப்பு நமக்கு உள்ளது ,அதற்காக ஜனநாயக வழியில் போராட ஜே.வி.பி. தயாராக உள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் இடம்பெற்ற கார்த்திகை வீரர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
















