அரச தொடர்மாடி வீடுகளுக்காக பம்பலப்பிட்டி ஹேக் வீதியில் பெருந்திரளான மக்கள்

peoples5அரச தொடர்மாடி வீடுகளுக்கான விண்ணப்பங்களை தனது அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான கௌரவ பிரபா கணேசன் அவர்கள் அறிவித்திருந்தார். இதன் பிரகாரம் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஹேக் வீதி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரதியமைச்சரின் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. அன்று கொழும்பில் வசிக்கும் பெருந்திரளான மக்கள் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றதைக் காணமுடிந்தது.

தொடர்ந்து கொழும்பு மக்கள் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலும் பிரதியமைச்சர் பிரபாகணேசன் அவர்களின் பம்பலப்பிட்டி அலுவலகத்திற்கு வந்து வரிசையாக காத்திருந்தபோதிலும், சனி ஞாயிறு தினங்களில் மாத்திரமே விண்ணப்பப்படிவம் வழங்கப்படுமென்று கூறி அலுவலக அதிகாரிகளால் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர். அத்துடன் அலுவலகத்தில் அது தொடர்பிலான அறிவித்தலும் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்தது. இதற்கிணங்க இன்று சனிக்கிழமை அதிகாலையிலேயே அமைச்சரின் அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவு மக்கள் குழுமியிருந்தனர். காலை 7.00 மணிமுதல் நீண்ட வரிசையாக அம்மக்கள் காத்திருந்தனர்.

அந்த நீண்ட வரிசையானது ஏறக்குறைய மேற்படி அலுவலகம் அமைந்துள்ள ஹேக் வீதியின் கடைசிவரை அதாவது கடற்கரைவரை நீண்டிருந்ததைக் காணமுடிந்தது. பிரதியமைச்சரின் அலுவலக அதிகாரிகள் வருகைதந்து காலை 10 மணியளவில் விண்ணப்பங்களை விநியோகிக்க ஆரம்பித்தனர். விண்ணப்பஙகளைப் பெற மக்கள் முண்டியடித்துக் கொண்டு காத்திருப்பதைக் காணமுடிகின்றது. இன்று மாலைவரை இது தொடரும் என்றும் மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: ,

Leave a Reply