இலங்கை அரசாங்கம் சீனாவுடன் நீண்ட கால உறவினைக் கொண்டிருக்கின்றது. அதே போன்று இந்தியாவுடனான உறவும் மிகவும் சுமுகமானதே. இரு தினங்களுக்கு முன்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனாவுடனான தொடர்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்று நாம் நினைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.
இலங்கை அரசின் சீனாவுடனான உறவையும் இந்தியாவையும் பிணைத்துக் காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு எடுக்கின்ற முயற்சியாகும். இலங்கை – இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உறவு தொடர்பான அவரது கூற்றுக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் இறுதியில் பதிலளித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் பீரிஸ் இங்கு மேலும் கூறுகையில்;
வெளிவிவகார அமைச்சும் அரசாங்கமும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கொள்கை ரீதியான உறவுகளை மேற்கொண்டு வருகிறது.
அரசாங்கம் கொண்டிருக்கும் ராஜதந்திர நடவடிக்கைகள் வெளிவிவகார உறவுக்கொள்கைகள் என்பன எமது நாட்டிற்குப் பல வெற்றிகளைத் தேடிக்கொடுத்துள்ளன.
பொதுநலவாய மாநாடு இலங்கையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட அதேவேளை 54 நாடுகளின் தலைவர்களும் இங்கு வருகை தந்திருந்தனர். இதன் மூலம் எமது உறவுகள் விரிவடைந்தன. இதேபோன்று தான் பொது நலவாய நாடுகளின் இளைஞர் மாநாடும் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மீதான நம்பிக்கையின் பேரிலேயே பொதுநலவாய நாடுகளின் அனைத்துப் பணிகளும் வெற்றி பெற்றன.
கடந்த காலங்களைப் போலல்லாது குறிப்பாக கடந்த 3 – 4 வருடங்களுக்கு முன்னர் போலல்லாது தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுடனான உறவு மேலும் விரிவடைந்திருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு சிரேஷ்ட உறுப்பினராவார். அவர் மீது நான் மரியாதை கொண்டிருக்கிறேன். எனினும் அவர் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு முயற்சிக்கிறார்.
சீனாவுடனான உறவு இந்தியாவுடனான உறவு மற்றும் சீனாவுடன் இலங்கை அரசு கொண்டிருப்பதான இந்தியாவின் நிலைமை என்றவாறு ஒன்றையொன்று பிணைத்து குழம்பிய கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏற்க முடியாது. இதனை நான் கண்டிக்கிறேன்.
சீனாவுடனான உறவானது முன்னாள் பிரதமர் அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்திலிருந்தே பேணப்பட்டு வருகிறது.
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில்தான் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜயவர்தனவின் காலப்பகுதியில்தான் கொழும்பு உயர்நீதிமன்ற கட்டிடத்தொகுதி நிறுவப்பட்டது.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் நாம் இந்தியாவுடன் மிகவும் சிநேகபூர்வ உறவினைப் பேணி வருகின்றோம். பிரதமர் நரேந்திரமோடி இரு தினங்களுக்கு முன்பு கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் தொலைபேசியூடாக பேச்சு நடத்தியுள்ளார். அத்துடன் இந்தியத் தூதுவரும் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியாவுடனான தொழிற்சாலைகள் புகையிரத சேவை வீதி அபிவிருத்திகள் கட்டுமாணப் பணிகள் என்பன இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நாம் இந்தியாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். நிலைமை இவ்வாறு இருக்கும் போது சம்பந்தன் எம்.பி. அவதூறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்க முடியாது.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாம் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு தலை சாய்க்கப்போவதில்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். இதனை முன்னரும் கூறியுள்ளேன். மேலும் இவ்விவகாரம் தொடர்பில் நாம் தற்போது 14 நாடுகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எமது நாட்டைப் பாதுகாப்பதற்கான வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுப்போம்.
மேலும், ஜெனிவாவின் வதிவிடப்பிரதிநிதியின் நிரந்தர அலுவலகம் அமைக்கும் பணிகள் புவி சார் அமைப்பைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறுமையானவை. இதனை ஒரு பொருட்டாகவே நாம் ஏற்கவில்லை என்றார்.
















