யாழ்ப்பாணத்தில் கடந்த 1995 , 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது வங்கிகளில் இருந்த பணம், நகைகள் மற்றும் வங்கிக் கணக்குகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் 18 ஆவது அமர்வில் அண்மையில் கிளிநொச்சியில் வைத்து விடுதலைப்புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்தவர்களில் சிலருக்கு முதற்கட்டமாக அவர்களின் நகைகளை வழங்கி வைத்தார்.
எனவே அவ்வாறு மக்களுகஷக்கு வழங்கியதைப் போல 1995, 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வில் வங்கிகளில் வைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் மற்றும் கணக்குகளையும் மீளவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு நிறைவேற்ற முடியாத பட்சத்தில் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு என குறித்த தொகையினை வழங்குமாறும் கோரப்பட்டு இருந்தது. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றினை அவைத்தலைவர் சீ.வி. கே சிவஞானம் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இடப்பெயர்வின் போது ஏற்கனவே மக்கள் மேற்கொண்ட அடகுகள் மற்றும் கணக்குகள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவை இதுவரை அவர்களுக்கு மீள வழங்கப்படவில்லை.
மக்களின் சொத்துக்களை தமதாக்கிக் கொள்ளக் கூடாது இது நியாயமற்ற விடயம் ஆகும். எனவே பொதுமக்களுடைய அடகு நகைகள், பணம் மற்றும் வங்கிக் கணக்குகளை மீள வழங்க வேண்டும் .இல்லையேல் அதனை மாவட்ட அபிவிருத்திக்கு வழங்க வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















