உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாகவே எவ்வாறு அரச ஊடகத்திற்கு கசிந்தது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவது தொடர்பில் ஏதேனும் சட்ட சிக்கல்கள் காணப்படுகின்றனவா? இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளின் பின்னர் தேர்தலுக்காக அழைப்பு விடுக்க முடியுமா? ஆகிய கேள்விகளுக்கு ஜனாதிபதி உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியிருந்தார். உச்ச நீதிமன்றின் சட்ட விளக்க அறிக்கை கடந்த 10ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், 9ம் திகதியே சட்ட விளக்கம் தொடர்பிலான அறிக்கை அரச ஊடகத்திற்கு கிடைக்கப்பெற்று தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததாகவும், இதனை சாதாரண விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றிற்கு ஜனாதிபதி அனுப்பி வைக்கத்த சட்ட விளக்கம் கோரலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அனுப்பி வைக்கப்பட்ட மனுக்கள் தொடர்பிலான புள்ளி விபரத் தகவல்ளையும் துல்லியமாக அரச ஊடகம் வெளியிட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
மொத்த எண்ணிக்கை மட்டுமன்றி ஆதரவாக மற்றும் எதிராக அனுப்பி வைக்கப்பட்டிருந்த எழுத்து மூல கருத்துக்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களையும் அரச ஊடகம் முன்கூட்டியே அம்பலப்படுத்தியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரகசியமான முறையில் சட்ட விளக்கம் தொடர்பில் ஆராயப்பட்டு வந்த நிலையில் எவ்வாறு அரச ஊடகங்களுக்கு இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யார் யார் எழுத்து மூலமாக பதில்களை அனுப்பி வைத்தார்கள் என்பது பற்றிய விபரங்கள் கூட வெளியிடப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்து உரிய வகையில் விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது உச்ச நீதிமன்றின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
















