ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய அதிகாரியொருவர் மூலம் இது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அண்மையில் கேட்டுப் பெற்றிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் கருத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
எனினும் எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் இன்னும் விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
எனவே எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கவும், பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தைப் போக்கி ஆதரவை அதிகரித்துக் கொள்ளவும் உச்ச நீதிமன்றக் கருத்துக்களை பகிரங்கப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.
















