உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்தியாவில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட சுமார் 35.6 கோடி பேர் உள்ளனர். உலகில் உள்ள ஐந்து இளைஞர்களில் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகையில் சீனாவைவிட குறந்த அளவில் இருந்தாலும், அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தால் நடத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்ட சர்வதேச மக்கள் தொகை ஆய்வின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மொத்த மக்கள் தொகையான 126 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் பேர்களில் இளைஞர்கள் மட்டுமே கிட்டத்தட்ட மூன்றில் ஒருபாகத்தினர் இளைஞர்களாக உள்ளனர். 136 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சீனாவில் இளைஞர்கள் 26.9 கோடிபேர்கள் தான் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் சீனாவை தொடர்ந்து 6.7 கோடி இளைஞர்களை கொண்ட இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், 6.5 கோடி இளைஞர்களை கொண்ட அமெரிக்கா நான்காவது இடத்திலும், 5.9 கோடி இளைஞர்களை கொண்ட பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும், 5.7 கோடி இளைஞர்களை கொண்ட நைஜீரியா ஆறாவது இடத்திலும், 5.1 கோடி இளைஞர்களை கொண்ட பிரேசில் ஏழாவவது இடத்திலும், 4.8 கோடி இளைஞர்களை கொண்ட வங்காளதேசம் எட்டாவது இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
















