காவிரி விவகாரம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தி அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருப்பதே தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்யக்கூடிய நன்மையாக இருக்கும் என முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் காட்டமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் மீது மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதற்கு தடையாணை கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது. தமிழக அரசு மனு தாக்கல் செய்யவிருப்பதால் இந்த விவகாரத்தில் கருணாநிதியின் அறிவுரை தேவையில்லை.
கர்நாடக அரசால் மேகதாதுவில் அணைகள் கட்ட விருப்பம் கோரும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் போதிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தி அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருப்பதே தமிழக மக்களுக்கு.கருணாநிதி செய்யக்கூடிய நன்மை என்பதை கூறி, இது போன்ற அறிக்கைகளை தமிழர்களுக்கு எதிராக கர்நாடகமும், கேரளமும் பயன்படுத்திடக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, ‘நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்’ என்ற புறநானூற்றின் வரிகளின் படி நடந்து கொள்ள வேண்டும் என கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்காக அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவினர் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. எனவே, இந்த விபத்தில் பிரதமருக்கு இது குறித்து எந்த கடிதமும் எழுதத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேவியட் போன்ற சட்ட நுணுக்கங்கள் பற்றி எதுவும் தெரியாமல், அதைப் பற்றி அறிவுரைகள் வழங்குவதை .கருணாநிதி இனி மேலாவது நிறுத்திக் கொள்வது அவருக்கும் நல்லது; நாட்டு மக்களுக்கும் நல்லது” எனக் கூறியுள்ளார்.
















