ஜெயலலிதா வழக்கில் பா.ஜ.கவின் தலையீடு. ஆச்சார்யா அதிர்ச்சி தகவல்

jayalalitha-new-1-600ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் கர்நாடக மாநிலத்தின் அரசு வழக்கறிஞரான ஆச்சார்யா. யாருக்கும் அசைந்து கொடுக்காமல் வழக்கை நடத்திய அவரை, இறுதியில் வழக்கில் இருந்தே விடுபட்டுப் ‘போக’ வைத்துவிட்டார்கள். பெங்களூரு வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை கனத்த மௌனத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த ஆச்சார்யா, இப்போது ‘ஆல் ஃப்ரம் மெமரிஸ்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் 14 பக்கங்களை ஜெயலலிதா வழக்கு சம்பந்தமாக எழுதி உள்ளார் ஆச்சார்யா. அவற்றில் ஒலிக்கும் ஆச்சார்யாவின் குரல்…

சேர்ந்தா, தனித்தனியாகவா?

”இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் எனக்கு விளம்பரம் தேடித்தந்த வழக்கு. வழக்கறிஞராக நான் பயணித்த பாதையில் என் மீது அதிகமான ஊடக வெளிச்சத்தைப் பாய்ச்சி எனக்கு விளம்பரம் தேடித்தந்த வழக்கு செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேருக்கு எதிராக நான் ஆஜரான சொத்துக் குவிப்பு வழக்குதான். இந்த வழக்கின் அரசு வழக்கறிஞர் நான். 1991 முதல் 1996 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கடுத்த தேர்தலில் தோற்றுப் போனதும் அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அவை இரண்டு வழக்குகள். ஒன்று சொத்துக் குவிப்பு வழக்கு. இன்னொன்று லண்டன் ஹோட்டல் வழக்கு.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்்கு வந்தது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக என்னை நியமித்து 2005, பிப்ரவரி 19ம் தேதி உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பச்சாப்புரே நியமிக்கப்பட்டார். ஆனால், வழக்கை உரிய விசாரணை நடத்த அவரால் முடியவில்லை. ஏனென்றால், லண்டன் ஹோட்டல் வழக்கையும் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும், இரண்டு வழக்கையும் ஒரே வழக்காக நடத்த வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் மனு செய்யப்பட்டது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, முதல் கட்ட விசாரணையே முடிந்திருந்தது. ஆனால், லண்டன் ஹோட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதோடு சரி. அதில் யார் யார் என்னென்ன குற்றம் செய்திருக்கிறார்கள் என்பதுகூட வரையறுக்கப்படவில்லை. இதனால், இரண்டு வழக்குகளையும் சேர்த்து நடத்த முடியாது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வில், குற்றவாளிகள் தரப்பில் இரண்டு வழக்குகளையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், அதே சமயத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி, ‘இல்லை இல்லை இரண்டையும் தனித்தனியாகத்தான் விசாரிக்க வேண்டும்’ என்று ஒரு மனுச் செய்தார். மற்றொருவர், ‘இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும்’ என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இப்படி பல்வேறு குளறுபடிகளால், மொத்தமாக இரண்டு வழக்குகளும் ஓர் அங்குலம்கூட நகராமல் அப்படியே நின்றன. இதற்கிடையே க.அன்பழகன் உச்ச நீதிமன்றம் சென்று, இரண்டும் வேறு வேறு வழக்குகள். இரண்டையும் தனித்தனியாகத்தான் நடத்த வேண்டும் என்றும் ஒரே வழக்காக நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக இந்த இரண்டு வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்குத் தடை விதித்தது.”

லண்டன் வழக்கைப் பிரித்தேன்!

”இந்த நேரத்தில், நான் ஒரு முக்கியமான வேலையைச் செய்தேன். லண்டன் ஹோட்டல் வழக்கின் ஆதாரங்கள் அனைத்தையும் துழாவி ஆராய்ந்து ஓர் அறிக்கையைத் தயார் செய்து, அதை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்்கு அனுப்பிவைத்தேன். இந்த வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்ற முறையில் அதை நான் செய்தேன். அந்த அறிக்கையில், லண்டன் ஹோட்டல் வழக்கைப் பொறுத்தவரை அரசுத் தரப்பிடம் எந்தவிதமான உரிய ஆதாரங்களும் இல்லை. அது வாய்மொழியாக அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கு. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கு அப்படிப்பட்டதல்ல. அதில் குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களும் ஆவணங்களும் வலுவாக உள்ளன. ஆனால், லண்டன் ஹோட்டல் வழக்கை இந்த வழக்கோடு சேர்த்து விசாரித்தால், அது இரண்டு வழக்குகளையும் பலவீனப்படுத்திவிடும். ஆதாரங்களை வலுவற்றதாக்கிவிடும். குற்றவாளிகள் எளிதாகத் தப்பித்துவிடுவார்கள். எனவே, லண்டன் ஹோட்டல் வழக்கை அதில் இருந்து தனியாகப் பிரித்துவிடுவதே நீதியை நிலைநாட்டுவதற்கான சரியான நடவடிக்கையாக இருக்கும். லண்டன் ஹோட்டல் வழக்கைப் பொறுத்தவரையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்காரர்கள். அவர்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாரையும் இதுவரை போலீஸ்காரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவர்களுக்கு இந்த வழக்குத் தொடர்பாக சம்மன் அனுப்புவதும் அவர்களை இந்த நீதிமன்றத்துக்கு வரவழைப்பதும் நடைமுறைச் சாத்தியத்தைக் குறைக்கும் வேலை. எனவே, சி.ஆர்.பி.சி பிரிவு 321ன் படி, அரசுத் தரப்புக்கு லண்டன் ஹோட்டல் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டேன். இதனை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது. உச்ச நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்குக்கு எதிராக இருந்த தடைகள் கொஞ்சம் தகர்ந்தன. ஆனாலும் குற்றவாளிகள் தரப்பு ஓயாமல், சிறப்பு நீதிமன்றம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உத்தரவுக்கும் எதிராக மனுக்கள் மேல் மனுக்களைப் போட்டுக்கொண்டு இருந்தனர். எனது சுமையும், சிறப்பு நீதிமன்றத்தின் வேலைப்பளுவும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.”

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஒத்துழைக்கவில்லை!

”அந்த நேரத்தில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக ஆனார். அவ்வளவுதான். அதுவரை நான் யாருக்காக வாதாடிக்கொண்டிருந்தேனோ அந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறின. அவர்களின் போக்கு வேறுமாதிரியாக ஆனது. உடனடியாக அவர்களுக்காகப் புதிய வழக்கறிஞரை நியமிக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலோடு நடக்கும் இந்த வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர்கள் இஷ்டத்துக்கு அவர்களுக்கு வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள முடியாது. இதை எதிர்த்து நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தேன். லஞ்ச ஒழப்புத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் வாதாடினார்.

ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அவர்களுக்கான வழக்கறிஞரை அவர்களாக நியமித்துக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றம் சென்றனர். எனக்காக நானே வாதாடினேன். இறுதியில் உச்ச நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அவர்களாக அவர்களுக்கான வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள முடியாது. இந்த வழக்கு தங்களின் மேற்பார்வையில், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்துகொண்டிருக்கிறது. தற்போது வழக்குக்கான எல்லை கர்நாடகா. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம்தான் அரசுத்தரப்பு வழக்கறிஞரை நியமிக்க முடியும் என்று சொல்லி உத்தரவிட்டது.”

ஜெயலலிதா வர மறுத்தார்!

”கேள்வி பதில் விசாரணைக்கு ஆஜராவதற்கு ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டி யிருந்தது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, தான் முதலமைச்சராக இருப்பதால், நேரில் ஆஜராகி சாட்சி சொல்வதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச் செய்தார். அங்கு தள்ளுபடி ஆனதும், மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றார். அங்கும் தள்ளுபடியானது. அடுத்து ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்தும் பல போராட்டங்களை நடத்தித்தான் ஜெயலலிதாவை பெங்களூரு வரவழைக்க முடிந்தது. அதன் பிறகுதான் அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அது இரண்டு நாட்கள் நீடித்தது. உடனே, ஒரு மனுவை எடுத்துக்கொண்டு மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றனர். இரண்டு நாட்கள் தன்னிடம் விசாரணை நடத்தி அலைக்கழிக்கின்றனர். ஒரே நாளில் தன்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அதையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் எத்தனை நாட்கள் ஆனாலும், நேரில் ஆஜராகி சொல்ல வேண்டிய பதில்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது.”

என்னை எதிர்க்க ஆரம்பித்தார்கள்!

”இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் அரசுத் தலைமை வழக்கறிஞராக நான் நியமிக்கப்பட்டேன். உடனே, அதை ஆயுதமாக எடுத்து என்னை ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தாக்கத் தொடங்கினார்கள். ஒருவர் இரண்டு பதவியில் இருப்பது கூடாது. எனவே, ஆச்சார்யாவை, சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று கவர்னரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இரண்டு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர். பொதுநல வழக்குப் போட்டார் ஒருவர். ஆனால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி ஆனது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக கவர்னரிடம் கொடுத்த மனு வேலை செய்தது. பி.ஜே.பியின் மேலிடத்தில் இருந்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. என்னை அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பில் மட்டும் வைத்துக்கொள்ளவும் சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விடுவிக்கவும் அந்த அறிவுறுத்தல் இருந்தது. அந்த அழுத்தம் எனக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், நான் என்னுடைய அரசுத் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தேன். சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் சிறப்பு அரசுத்தரப்பு வழக்கறிஞராக செயல்படவே விரும்பினேன்.”

என்னை மிரட்டினார்கள்!

”சென்னையில் இருந்து இரண்டு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் மற்றும் உள் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு ஒரு மனுவைக் கொடுத்தனர். அதில் நான், வேண்டுமென்றே ஜெயலலிதா மீது உள்ள வன்மத்தால் இந்த வழக்கை நடத்துகிறேன். எனவே, என்னைச் சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். அவர்களின் அனைத்து அஸ்திரங்களும் அர்த்தம் இழந்த நேரத்தில் கடைசியாக வேறு ஒன்றைக் கையில் எடுத்தனர். நான், பி.எம்.எஸ் கல்வி அறக்கட்டளை ஒன்றில் சேர்மன் பொறுப்பில் இருந்தேன். அந்த அறக்கட்டளை சில பொறியியல் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருந்தது. அதில், நிர்வாகத்தில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் அதில் எனக்கும் தொடர்பிருப்பதாகவும் சிலர் என் மீது கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தனர். முதலில், நான் அரசுத் தலைமை வழக்கறிஞராக இருப்பதால் நான் ஓர் அரசு ஊழியர். தனி நபர் ஒருவர் என் மீது வழக்குத் தொடுக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், என் மீது வழக்குத் தொடர அப்படி அந்த தனிநபர் அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே, அந்த மனுவே ஏற்கத்தக்கது அல்ல. ஆனால், லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டதுடன் ஒரு விசித்திரமான உத்தரவையும் பிறப்பித்தது. அது மனுதாரர்களிடம் சொன்னது, நீங்கள் அளித்திருக்கும் புகாரில் உரிய முகாந்திரம் இல்லை. எனவே, இன்னும் முகாந்திரம் உள்ள ஒரு மனுவை தயாரித்துக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டது.

இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என் மீது வழக்குத் தொடரவே அவர்களுக்கு அனுமதி இல்லை. அந்த ஒரு விஷயத்தை வைத்தே நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கலாம். ஆனால், அதோடு போதிய ஆதாரங்கள் இல்லாத மனு என்ற அடிப்படையிலாவது அதை தள்ளுபடி செய்திருக்க வேண்டும், அதையும் செய்யவில்லை. மாறாக நிறைய ஆதாரங்களைக் கொண்டு ஒரு மனுவை தயாரித்துக்கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டதை எப்படி என்றே என்னால் யூகிக்க முடியவில்லை.

மேலும், இந்தப் புகாரை என் மீது அளிப்பதற்கு முன்பு என்னைச் சந்தித்த ஒரு நபர், ‘நீங்கள் உடனடியாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விலகிக்கொள்ளாவிட்டால், உங்கள் மீது ஏராளமான புகார்களை வைத்து லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகச் சொல்கிறார்கள். எனவே, தயவுசெய்து அதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்’ என்று வேண்டுகோள் வைக்கும்தொனியில் என்னை மிரட்டவும் செய்தார்.”

பதவியை ராஜினாமா செய்தேன்!

”வழக்கறிஞர் தொழிலில் அடியெடுத்து வைத்ததில் இருந்து நான் நீதியின் பக்கமே செயல்பட்டிருக்கிறேன். கடந்த 56 ஆண்டுகளாக என்னுடைய நேர்மையின் மூலம் கட்டி வைத்திருந்த என்னுடைய மாண்பு தகர்க்கப்பட்டதாக எண்ணி அயர்ச்சி அடைந்தேன். நான் அப்போதே இந்த வழக்கில் நான் சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், அதே சமயம், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து என் மீது படிந்திருந்த கறையை நீக்கிவிட்டுத்தான் நான் அதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு நான் பதவி விலக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதனால், லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தேன். அப்போது கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவரும், என் பின்னால் இருந்தனர். கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த உத்தரவுகளை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவு 2012, ஆகஸ்ட் 2ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. நான் அதற்கு அடுத்த நாள் அதாவது 3ம் தேதி என்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தேன்.

ஆனால், தலைமை நீதிபதி என்னை அழைத்து என்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், நான் எந்த நிலையிலும் அதைச் செய்யமாட்டேன் என்று சொல்லி என்னுடைய முடிவில் உறுதியாக நின்றேன். ஆனால், என்னுடைய ராஜினாமாவை அவர்களும் உடனடியாக ஏற்கவில்லை. 2013, ஜனவரி 17ம் தேதி ஏற்றுக்கொண்டனர். அன்றோடு எனக்கும் சொத்துக் குவிப்பு வழக்குக்்கும் இருந்த தொடர்பு முடிந்தது. என்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் இறுதிவரை போராடாமல் நான் இடையில் விலகிக்கொண்ட வழக்கு இது ஒன்றுதான். அந்த அளவுக்கு எனக்கு இடையூறுகள் கொடுக்கப்பட்டன” என்று முடித்துள்ளார் ஆச்சார்யா.

”இந்த வழக்கை வைத்து ‘சட்டத்தை இழுத்தடிக்கும் வழிமுறைகள்’ (‘லா ஆஃப் அட்ஜர்ன்மென்ட்’) என்று ஒரு நாவலையே என்னால் எழுத முடியும். ஆனால், எதிர்காலத்தில் அது குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்ற காரணத்தால் அதை நான் செய்யாமல் இருக்கிறேன்” என்று ஆச்சார்யா கிண்டல் அடிக்கவும் தவறவில்லை.

Thanks to vikatan.com

Tags: , ,

Leave a Reply