ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.30 க்கு பின்னர் வெளியிடவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான அறிவிப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டார் இதன் காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தற்போது அலரி மாளிகை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தரப்பினருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களும் அலரிமாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஜனாதிபதியின் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று பிற்பகல் 1.30 அளவில் அறிவிக்கப்பட உள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
















