விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மீஞ்சூர் கோபியின் பிரச்சனை தற்போதுதான் முடிந்துள்ள நிலையில் மீண்டும் ஒருவர் கத்தி படத்தின் கதைக்கு உரிமை கொண்டாடியுள்ளார்.
நண்பன் படத்தில் ஷங்கரின் இணை இயக்குனராக பணியாற்றிய நரசிம்மராவ் என்ற இணை இயக்குனர், நண்பன் படத்தின் படப்பிடிப்பின் இடையே விஜய்யிடம் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதைதான் கத்தியாக வெளிவந்துள்ளது என்றும், சமீபத்தில் தான் கத்தி படத்தை பார்த்தபோதுதான் இந்த உண்மை தனக்கு தெரிய வந்துள்ளதாகவும் புகார் கூறியுள்ளார்.
விஜய்யிடம் கூறிய கதையை நரசிம்மராவ் கடந்த 2010ஆம் ஆண்டே இயக்குனர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கத்தி படத்தையும் நரசிம்மராவ் பதிவு செய்திருந்து வைத்த கதையையும் ஒப்பிட்டு பார்த்த சங்க நிர்வாகிகள் விஜய் நடித்த கத்தி படத்தில் நரசிம்மராவின் 80% கதை அப்படியே உள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இதனால் நரசிம்மராவுக்கு நியாயம் கிடைக்கும் வரை ‘கத்தி’யை தெலுங்கில் டப் செய்யவோ அல்லது ரீமேக் செய்யவோ கூடாது என்றும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு தெலுங்கு படங்கள் இயக்கும் வாய்ப்பை யாரும் கொடுக்க கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் தெலுங்கு படங்களின் ரீமேக் உரிமையை விஜய்க்கு கொடுக்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளனர். விஜய் மற்றும் முருகதாஸ் இருவருக்கும் தெலுங்கு திரையுலகம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
















