5 மீனவர்கள் விடுதலைக்கு காரணம் பிரபாவா? தொண்டாவா? மஹிந்தவா? புதுப்பிரச்சினை!

mahintha rajapakshaமரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டமை இந்தியாவுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அதனை தான் வரவேற்பதாகவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் விடுதலை குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

´இந்திய மீனவர்களின் வீடுதலை சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு நான் கொண்டு வந்திருந்தேன். ஜனாதிபதியும் இந்திய அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அவர்களை விடுவிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இருப்பினும் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ததை மீளப்பெறுமாறும் தெரிவித்து அதனை இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் தெரிவிக்குமாறும் எனக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் நல்லெண்ணத்திற்கு நான் நன்றியைத் தெரிவித்திருந்தேன்.

அதே போல் உடனடியாக இந்திய பிரதி தூதுவரிடம் ஜனாதிபதியின் செய்தியை தெரிவித்தேன். இருப்பினும் மேல்முறையீட்டு வழக்கினை மீளப்பெறுவது சம்பந்தமாக இந்திய அரசாங்கம் காலதாமதத்தை ஏற்படுத்தினார்கள்.

இவை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பிரச்சினையாகும். அதில் நான் தலையிடவில்லை. இருப்பினும் இன்று வழக்கு மீளப்பெறப்பட்டு இந்திய மீனவர்கள் விடுதலை செய்யபட்டுள்ளார்கள்.

இது இந்திய வம்சாவளியை சேர்ந்தவன் என்ற முறையிலே எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

அதே நேரம் ஜனாதிபதியுடன் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நான் பேசியதும் அவர்களது விடுதலை சம்பந்தமான செய்தியை இந்திய தூதரகத்திற்கு ஜனாதிபதி தெரிவிக்க சொன்ன விடயத்தை இலங்கை இந்திய ஊடகங்கள் அதிகளவில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனை பொறுக்காத இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களுக்கே தாங்கள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது மூக்கை நுழைத்து இந்திய மீனவர்களின் விடுதலைக்கு தாங்களே காரணம் என்று அவர்களுடன் நின்று படம் எடுத்து ஊடகங்களுக்கு வெளியிட்டிருப்பதைப் பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கின்றது.

இதேபோன்று தான் மலையக தொழிலாளர்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றார்கள். எவ்வாறாயினும் இந்திய மீனவர்களின் விடுதலைக்கு நான் காரணம் என்று ஒரு போதும் சொன்னதில்லை.

உண்மையிலேயே இந்திய மீனவர்களின் விடுதலைக்கான காரணம் ஜனாதிபதி எடுத்த தீர்க்கத் தரிசனமான முடிவாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியின் கவனத்திற்கு நான் கொண்டு செல்ல முன்பாக எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இந்திய மீனவர்களின் விடுதலைக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.´ – இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply