வவுனியாவில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரின் முறைகேடுகள் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் நேற்றைய அமர்வில் வாய்மொழி மூலமானகேள்வியின் பேதே இதனைத் தெரிவித்தார். இதன் போது குறித்த அதிபருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
1. 2012ம் ஆண்டு பால் விநியோகத்தில் மோசடி செய்தமை
2. 2013ம் ஆண்டு வனியா பெரிய கோமரசங்குளம் ம.வி இருந்து இடமாற்றம் பெற்று சென்ற போதும் இன்று வரை அப் பாடசாலைகளின் பெறுமதியான பொருட்கள் சிலவற்றை கையளிக்காமை.
3. 2008,2009 காலப்பகுதியில் வலயக் கல்விப் பணிப்பாளரால் அரச உடமை துஸ்பிரயோகம், நிதி மோசடி சம்மந்தமாக செய்யப்பட்ட முறைப்பாடு
4. 2014ல் வவுனியா பூந்தோட்டம் ம.வி இல் இருந்து ஆசிரியர்களை அச்சுறுத்தி பாடசாலையில் இருந்து வெளியேற்றியமை.
5. 2014.10.14ஆம் திகதி பாடசாலை அபிவிருத்திச் சங்க கணக்கில் இருந்து 14மற்றும் 15ம் திகதிகளில் நிதி நடவடிக்கைக்கு புறம்பாக 6,17,400 ரூபாவுக்கான காசோலையை தனது பேருக்கு எழுதியமை.
மேற்படி விடயங்கள் சம்பந்தமாக 2009 ஆண்டில் இருந்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? கல்வித் துறையில் மிகச் சிறந்த அதிகாரிகள் இன்று வரையும் கடமையாற்றி வருகின்றார்கள். இருந்தும் இவரது முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படாததால் இவர்களது கைகள் கட்டப்பட்டுள்ளனவா? என்ற சந்தேகம் எழுகின்றது. சம்பந்தப்பட்ட அதிபர் எனது நண்பர். ஒன்றாக கடமையாற்றி இருக்கின்றோம். இருந்தும் இவரது தவறான நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கை ஆரம்பத்தில் எடுக்கப்பட்டிருந்தால் தொடர் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும்.
வவவுனியா விபுலாநந்தா கல்லூரி அதிபர் நியமனம் சம்பந்தமாக 12.11.2014 கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து சம்பந்தமாக எனக்கு உடன்பாடு இல்லை. வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சுற்று நிருபம் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2008ஃ04 (திருத்தம்) என்பவற்றில் பாடசாலை அதிபர்களை நியமிப்பது சம்பந்தமாக மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சின் மேற்படி பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்க்கான விண்ணப்பம் கோரலில் நிபந்தனை 2ல் தாம் கடமையாற்றும் பாடசாலையில் 3 வருட சேவையை பூரணமாக நிறைவு செய்திருக்க வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிபந்தனை 2ய ல் “பொருத்தமான அதிபர் தரத்தினையுடைய பாடசாலையை சேவை நிலையமாகக் கொண்டிராதவர்களுக்கு இது பொருத்தமற்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த அதிபர் தரம் 1ஐ முடித்தவர் ஆவர். கடமையாற்றிய பூந்தோட்டம் ம.வி தரம் 1ஐ(1உ) சேர்ந்தது. தனது அதிபர் தரத்துக்கு பொருத்தமான பாடசாலையையே சேவை நிலையமாக கொண்டுள்ளார். இவ்வாறு இருக்க மேற்படி பல்வேறு குற்றப் பின்னணிகளை கொண்ட அதிபர் எவ்வாறு நியமிக்கப்பட்டார்.
சுயவிபரக் கோவையில் இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா? இது பற்றிய விபரங்கள் தீர விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். எனத் தெரிவித்தார்.
















