இன்று (21.11) தனது 61வது அகவையை எய்தும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கிருஸ்ணபிள்ளை தேவராசா, கடந்த 08.10.2014 புதன் கிழமை அன்று இராணுவ புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்காக வவுனியா மாவட்ட நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தார்.
ஆயினும் தாக்குதல்தாரிகளை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது தொடர்பில் பொலிஸார் காட்டிவரும் அசமந்தபோக்கு காரணமாக, குறித்த வழக்கு நீதிமன்றத்தால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. பிரஜைகள் குழு சார்பாக மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் அவர்கள் வழக்கை கண்காணிக்கின்றார்.
பிரஜைகள் குழுக்களின் இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார்(ராஜா), வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் தி.நவராஜ், ஓமந்தை பகுதி இணைப்பாளர் கு.இராஜேந்திரகுமார், செட்டிக்குளம் பகுதி இணைப்பாளர் மா.ரெனிதாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.
போலிக்குற்றச்சாட்டின் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து, கிளிநொச்சி தருமபுரம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டு, 200 நாள்களை கடந்தும் எவ்வித வழக்கு தாக்கல்களும் செய்யப்படாமல் நீதிக்குப்புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியினதும், ஏனைய தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலையை விரைபுபடுத்துமாறு வலியுறுத்தி,
கடந்த 10.10.2014 அன்று வவுனியா நீதிமன்றத்துக்கு முன்பாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவிருந்தநிலையில் குழுவின் தலைவர் கிருஸ்ணபிள்ளை தேவராசா, இராணுவ புலனாய்வாளர்களால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-கவரிமான்-
















