பியானோ இசைப்பாராம், பேஸ் வாய்ஸில் பாடுவாராம், டான்ஸ், தண்ணி பட்டபாடு, ஐஸ் ஸ்கேட்டிங்கில் கில்லி. இந்தி, ஆங்கிலம், மலையாளம், அரபி, ஃப்ரெஞ்ச் என ஐந்து மொழிகளில் பேசுவாராம். ரியல் ஹீரோயின்தான் கேத்ரீன் தெரஸா. ‘மெட்ராஸ்’ பட ‘கலையரசி’க்கு இன்னமும் லைக்ஸ் குவிந்துகொண்டிருக்கும் உற்சாகம் தொனிக்கப் பேசினார்!
”நான் பிறந்தது கோட்டயம்; வளர்ந்தது துபாய். 14 வயசுல ஃபேஷன் டிசைனிங் நண்பர்களுக்கு உதவி பண்றதுக்காக மாடலா போஸ் கொடுத்தேன். அது அப்படியே மாடலிங் உலகத்துக்கு இழுத்திருச்சு. நிறைய விளம்பரப் படங்களில் நடிச்சேன். மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடிச்சு, நாலே வருஷத்தில் 12 படங்கள்… நல்ல கிராஃப்ல!”
”அனுஷ்காவுடன் தெலுங்கில் ‘ருத்ரம்மா தேவி’ படத்தில் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு?”
” ‘ருத்ரம்மா தேவி’… இந்தியாவின் 3D சரித்திரப் படம். அனுஷ்காதான் ‘ருத்ரம்மா தேவி’. எனக்கு படத்தில் ஒரு இளவரசி கேரக்டர். அல்லு அர்ஜுன் காதலி நான். ப்பா… அனுஷ்கா ஒவ்வொரு சீன்லயும் மிரட்டியிருக்காங்க. அதுலயும் நானும் அவங்களும் போட்டி போட்டு ஆடுற மாதிரி ஒரு டான்ஸ். செமத்தியான டிரில். எவ்வளவு சோர்வானாலும், ‘எக்ஸ்பிரஷனும் நடனமும் மேட்ச் ஆகியிருக்கா?’னு மானிட்டர்ல அவங்களே பார்த்து திருப்தியான பிறகுதான், பிரேக் கிளம்புவாங்க. சின்னச் சின்ன ரிவிஷன் எழுதிட்டு, வருஷக் கடைசியில் பப்ளிக் எக்ஸாம் எழுதுற மாதிரி, ‘ருத்ரம்மா தேவி’ படத்துக்காக அவ்வளவு உழைப்பையும் கொட்டியிருக்கோம். அந்த உழைப்பின் ரிசல்ட்டை 3D-யில் பார்க்க, நானும் ஆர்வமா இருக்கேன்!”
” ‘மெட்ராஸ்’ படத்துல கார்த்தி ‘என்ன வேணும்’னு கேட்கிறப்ப, ‘ஆங்… நீதான் வேணும். கல்யாணம் பண்ணிக்கிறியா?’னு கேட்பீங்களே… செம ஸ்வீட். அப்படி நிஜ வாழ்க்கையில யார்கிட்ட ‘நீதான் வேணும்’னு சொல்வீங்க?”
” ‘டைட்டானிக்’ ஹீரோ லியானர்டோ டி காப்ரியோ!”
”உங்க ரியல் லைஃப் கேரக்டரை எப்படி டிசைன் பண்ணிக்குறீங்க?”
”நிறையப் படிப்பேன். அதான் என் ஒரே உற்சாகம்; பொழுதுபோக்கு. பாப்லோ நெருடா கவிதைகள்னா அவ்வளவு இஷ்டம். ‘இங்கே யார்கூடவும் போட்டி போடத் தேவை இல்லை. நீயே உன்கூட போட்டி போடணும்’னு ஓஷோ சொன்னதை எப்பவும் நினைச்சுப்பேன். ஐன்ஸ்டீன் ஃபார்முலா எனக்குப் பிடிக்கும். ‘வேலையில் அர்ப்பணிப்பு + செயல்படுத்துதல் + தேவை இல்லாமல் பேசுவதைக் குறைத்தல் = வெற்றி’. இதெல்லாம்தான் என் சக்சஸ் ரகசியம். அப்புறம் நிறைய மனிதர்களைச் சந்திக்கணும்; வித்தியாசமான இடங்களுக்குப் பயணிக்கணும்; எப்பவும் ஜாலியா சந்தோஷமா இருக்கணும். முக்கியமா… யாருக்கும் அட்வைஸ் பண்ணக் கூடாது!”
”கேத்ரீனுக்கு வேற என்ன ஹாபி?”
”நான் ஒரு பாடகி. நிறைய மேடைகளில் பாடியிருக்கேன். ஆனா, இதுவரை சினிமாவில் பாடினது இல்லை. வாய்ப்பு கிடைச்சா, அதைச் சரியா பயன்படுத்துவேன்!”
”நனவாகாத கனவு?”
” ‘மிஸ் இந்தியா’ டைட்டில்தான் என் கனவு. ஆனா, போட்டியில் கலந்துக்கிறதுக்கு முன்னாடியே நடிகை ஆகிட்டேன். ‘மிஸ் இந்தியா’ ஆகாதது வருத்தம்; நடிகை ஆனது சந்தோஷம்!”
”சினிமா போட்டியை எப்படிச் சமாளிப்பீங்க?”
”போட்டி எப்போதும் நல்ல விஷயம். ‘ஹோம்லியாத்தான் நடிப்பேன்’னு அடம்பிடிக்க மாட்டேன். டிரெஸ்ல கிளாமர் இல்லை. கிளாமர், ஃபெர்பாமன்ஸ் ரெண்டுக்கும் முக்கியத்துவம் தருவேன். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் ‘பொண்ணு பின்னுது’னு பேர் வாங்கணும். அது போதுமே!”
”படித்ததில் பிடித்தது?”
”கிரிகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய ‘சாந்தாராம்’ நாவல். 900 பக்கங்களுக்கு மேல் கொண்டது. அடுத்தது டீன் கூன்ட்ஸ் எழுதிய ‘ஒன் டோர் அவே ஃப்ரம் ஹெவன்’ நாவல்.”
”புது வருஷ சபதம்?”
”எதுவும் இல்லை. அன்னைக்கு ஒருநாள் மட்டும் எடுக்குற சபதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா, ரெண்டு ஆசைகள் இருக்கு. அடுத்த வருஷம் முழுக்க யாரையும் காயப்படுத்தாம இருக்கணும். வீட்டை ரொம்ப மிஸ் பண்ற அளவுக்கு பயங்கர பிஸியா இருக்கணும்!”
















