நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது கட்சியின் பிரதான இலக்கு என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் அரசியல் நிகழ்ச்சியில் நேற்றிரவு பங்கேற்ற ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக போட்டியிடும் இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்றும் வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதில்லை என்று ஜே.வி.பி ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
இந்தநிலையில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தற்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஜே.வி.பி. யின் செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்று வினாவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை முடிவுறுத்தும் நிலைப்பாட்டை ஜே.வி.பி கொண்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் மக்கள் தமது தீர்மானத்தை தாமே எடுக்கவேண்டும் என்பதே ஜே.வி.பியின் கொள்கை.
மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க மக்கள் விரும்பினால் அது அவர்களின் தீர்மானமாக அமையும். எனினும் எங்கள் கட்சி பெயர் கூறி வாக்களிக்கலாம் என்ற கோரிக்கையை மக்களிடம் முன்வைக்காது என்றும் அநுரகுமார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
















