பிரதமர் நரேந்திர மோடி சம்மதித்தால் அவருடன் சேர்ந்து வாழ தயார் என்று அவரது மனைவி என கூறப்படும் யசோதாபென் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மோடிக்கும் யசோதாபென் என்பவருக்கும் கடந்த 1968ம் ஆண்டு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய திருமணத்தின்போது இருவருமே டீன் ஏஜ் பருவத்தில் இருந்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்து விட்டார்.
மோடியின் மனைவி அதன்பின்னர் ஆசிரியையாக பண்புரிந்து அதன் பின்னர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். யசோதா பென்னுக்கு தற்போது 62 வயது ஆகின்றது. குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் ஈஸ்வர்வாடா கிராமத்தில் தன்னுடைய இரு சகோதரர்களுடன் தற்போது வசித்து வருகிறார்.
பிரதமர் மோடி திருமணம் ஆனவரா? இல்லையா? என்று நீண்ட காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதேதரா தொகுதியில் மோடி போட்டியிட்டபோது, வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற இடத்தில் யசோதாபென் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பின்னர்தான் மோடி திருமணம் ஆனவர் என்ற உண்மைஅனைவருக்கும் தெரிய வந்தது. மோடி பிரதமராக பதவி ஏற்றபின் அவரது மனைவி என்பதற்காக யசோதாபென்னுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யசோதாபென் சமீபத்தில் தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ” நரேந்திர மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ நானும் தயார். அவர் என்னை அழைத்து செல்ல வந்தால், அவருடன் செல்லத் தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
















