புதுக்கோட்டை மாவட்டத்தில் திருடன் ஒருவன், தன்னை அடித்த பெண் பொலிசிடம், அக்கா என்று உரிமையுடன் பேசிய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி–பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் செல் நிறுவனத்தின் முன்பு நேற்று இரவு அங்கு வேலை பார்க்கும் ஊழியர் பாண்டிராஜன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
அவர் திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் நின்றிருந்தவர்களிடம் விசாரித்தார்.
அவர்கள், சிறிது நேரத்திற்கு முன்பு தான் ஒருவன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
உடனே பாண்டியராஜனும் அவரது நண்பர்களும் மோட்டார் சைக்கிள் சென்ற திசையிலேயே தேடிச்சென்றனர்.
அப்போது அறந்தாங்கி அண்ணா நகர் பகுதியில் கட்டிட பணி நடந்து வரும் ஒரு வீட்டினுள் மோட்டார் சைக்கிள் நிற்பதை கண்ட அவர்கள், அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் மாடியில் ஒருவர் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
பாண்டியராஜனும், அவரது நண்பர்களும் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவன் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதியை சேர்ந்த சுப்பிரமணி (எ) தர்மன் (46) என்பதும் அவன்தான் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவனை பாண்டியராஜனும் அவரது நண்பர்களும் அறந்தாங்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது அங்கிருந்த சிறப்பு எஸ்.ஐ.ரவிக்குமார், சுப்பிரமணியிடம் விசாரித்த போது, ‘என்ன சார்.. என்ன தெரியலியா? நான் தான் சார் தர்மா… மொத்தம் அஞ்சு வண்டி திருடியிருக்கேன் சார்’ என்று சகஜமாக அவரிடம் கூறியுள்ளான்.
அப்போது அங்கு வந்த பெண் எஸ்.ஐ. ஒருவர் அவன் பேசுவதை பார்த்து ஆத்திரம் அடைந்து லத்தியால் தர்மாவை அடித்தார். அப்போது தர்மா, ‘அக்கா நீயே என்ன அடிக்கலமா’ என்று கூறி அவர் முன்பு வேலை பார்த்த பொலிஸ் நிலையம் பெயரையும் கூறியுள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த எஸ்.ஐ. அடிப்பதை நிறுத்தி விட்டு சென்றுவிட்டார்.
மோட்டார் சைக்கிளை திருடி பொலிசில் சிக்கிய ஒருவன் கொஞ்சமும் பயம் இன்றி பொலிசாரிடம் சகஜமாக பேசிய காட்சி அங்கு புகார் அளிக்க வந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
















