பாலக்கோடு நிதி நிறுவன அதிபர் ஆபாச வீடியோ காட்சி வெளியானதுபோல், போலீஸ் ஏட்டு ஒருவர்
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியானதால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிதி நிறுவன அதிபர் சிவராஜ் தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்க வரும் பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதை தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ காட்சி தர்மபுரி மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிநிறுவன அதிபர் சிவராஜ், வீடியோ காட்சிகளை வெளியிட்ட செல்போன் கடை ஊழியர் முன்னா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நிதி நிறுவன அதிபரால் பாதிக்கப்பட்ட 5 பெண்களிடம் போலீசார் புகார் மனு பெற்று அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நிதி நிறுவன அதிபர் சிவராஜை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசார் சிவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் முடிவுக்கு வருவதற்குள் போலீஸ் ஏட்டு ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி தர்மபுரியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு, அந்த போலீஸ் நிலையத்திற்கு புகார் மனு கொடுக்க வந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அந்த போலீஸ் ஏட்டு அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரித்த அதிகாரிகள் அந்த போலீஸ் ஏட்டுவை தர்மபுரி ஆயுதப்படைக்கு மாற்றினர். தற்போது அந்த போலீஸ் ஏட்டு, இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி செல்போன்கள் மூலம் வெளியாகி தர்மபுரி மாவட்டத்தில் பரவி வருகிறது. இதனால் தர்மபுரியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் மனு கொடுக்க வந்த இளம்பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அவரை வேறு மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு புகார்களில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனாலும் தர்மபுரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் மீது பொதுமக்கள் பல்வேறு புகார்களை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆபாச வீடியோ காட்சி வெளியான சம்பவம் தர்மபுரி மாவட்ட போலீசாரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆபாச வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
















