நடிகை குஷ்பு, சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
திமுக முக்கிய பேச்சாளராக விளங்கிய நடிகை குஷ்பு, குறுகிய காலத்தில் அக்கட்சியின் முன்னணி பிரசார பிரமுகராக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து திடீரென விலகினார்.
தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி குஷ்பூ தனது கருத்தை சுதந்திரமாக வெளியிட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து திமுகவில் இருந்து விலகினார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை குஷ்பு மறுத்திருந்தார்.
சோனியாவுடன் சந்திப்பு
இந்நிலையில், நடிகை குஷ்பு சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார்.
அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் திரு.முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் மகளிர் அணி தலைவியான ஷோபா ஓஜாவும், முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.வி.ரமணி ஆகியோர் அப்போது உடனிருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
எனது வீட்டிற்கு வந்துவிட்டதாக உணர்கிறேன்: குஷ்பு
அப்போது குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த தகவலை இளங்கோவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனையடுத்து மைக்கை வாங்கிய குஷ்பு, ” எனது வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். கடைசியில் எனது வீட்டிற்கு வந்துவிட்டதைப்போன்று உணர்கிறேன். கட்சியில் எனக்கு என்ன ‘ரோல்’ என்பதை கட்சி முடிவு செய்யும் வரை காத்திருப்பேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஓட்டு வாங்கித்தருவாரா?
தமிழக காங்கிரஸில் ஓரளவு தொண்டர்கள் செல்வாக்கு உள்ளவராக திகழ்ந்த ஜி.கே. வாசன், அக்கட்சியிலிருந்து விலகிவிட்ட நிலையில், அக்கட்சியில் மக்கள் செல்வாக்கு உள்ள ‘மாஸ் லீடர்’ என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை.
இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை குஷ்பு மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும். அதே சமயம் குஷ்புவை பார்க்கவும், அவரது பேச்சை கேட்கவும் திரளும் கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வாங்கித்தருமா? என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள்தான் சொல்லும்.
















