தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ அடகு நிலையங்களில் நகைகளை அடகுவைத்த 2,379பேர் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்ற நிலையில், நகைகளின் உரிமையாளர்கள் என அடையாளம் காணப்பட்ட 1,960பேரின் நகைகள், எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் திகதி ஒப்படைக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொழும்பில் வைத்து, அந்நகைகளின் உரிமையாளர்களிடம் அவை கையளிக்கப்படவுள்ளன. இதற்காக, நகை உரிமையாளர்களை கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கா, நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
அடையாளம் காணப்படாத நிலையில் 2,379 பேரின் நகைகள் இராணுவத்தினர் வசம் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில் தகவல்களைப் பெறும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இறுதி யுத்தத்தின்போது, முல்லைத்தீவு பிரதேசத்துக்கு விடுதலை புலிகள் பின்வாங்கிச் சென்ற போது, அவர்களுடைய அடகு நிலையங்களில் பாதுகாப்பற்ற வகையில் சிதறிக் கிடந்த இந்த நகைகள், இராணுவத்தால் மீட்கப்பட்டன.
இந்த நகைகளை பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு, அவற்றின் மீது, அடகு வைத்தவரின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன், அந்த அடகு நிலையங்களில் இருந்த கோப்புகளிலும் தரவுகளை குறித்து வைக்கப்பட்டிருநடதன. இவற்றை கொண்டு நகைகளின் உரிமையாளர்களை நாம் அடையாளம் கண்டோம் என இராணுவ தளபதி மேலும் கூறினார்.
















