கோத்தாபய 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை : உதய கம்மன்பில

கோத்தாபய ராஜபக்ஷ 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதிலும் அப்போது அதனை எவரும் அறிந்திருக்கவில்லை.

ஆனாலும் அவர் தனது மனசாட்சிக்கும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் எதிராகச் செயற்படக்கூடாது என்று கருதி, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தனது சகோதரனுக்கு அவர் வாக்களிக்கவில்லை.

மாறாக நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தனது வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான தீர்மானத்தையே அவர் மேற்கொண்டார் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது:

அண்மையில் பத்திரிகையொன்றில் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட பின்னரும் கூட, 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார் என்று செய்தியொன்று வெளியாகியிருந்தது.

அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் வேலை என்று நாங்கள் அச்செய்தியைப் பெரிதாகக் கருத்திற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது இதுகுறித்த விசேட விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக குற்ற விசாரணைப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அறிவித்திருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பொலிஸாரையும் பயன்படுத்திக்கொண்டு எம்மீது சேறுபூசும் செயல்களில் இறங்கியிருப்பது புலனாகின்ற காரணத்தினால் இவ்விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என அவர் இதன்போது தெரித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!