கார்த்திகை 27: வவுனியா மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுக்களின் ஏற்பாட்டில் இன்னுமொரு தொகுதி மக்கள் பாப்பரசருக்கு கடிதம்!

pope-letterசிறீலங்கா அரசின் இனப்படுகொலை, சித்திரவதைகள், துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள், மனிதகுலப்படுகொலைகள், கைதுகள், கடத்தல்கள், தடுத்து வைத்தல்கள், காணாமல் போகச்செய்தல்கள் உள்ளிட்ட மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களில் இன்னுமொரு தொகுதியினர் இன்று பாப்பரசருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

வரும் வருடம் (2015) தை மாதம் பாப்பரசர் அவர்கள் இலங்கைக்கு பயணம் செய்து, சமகால நிலைவரங்களை கண்காணிப்பதோடு, போரில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி சிறப்பு பிரார்த்தனையிலும் பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ள நிலையில்,

தமிழீழ மக்களின் தேசிய எழுச்சி நாளாகிய இன்று (மாவீரர் நாள் நவம்பர் – 27) வவுனியா மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுக்களின் ஒழுங்கமைப்பில் இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட செயல்திட்டத்தில், அரச வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அறுபதுக்கும் மேல்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கலந்துகொண்டனர்.

பிரஜைகள் குழுக்களால் பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் ஒன்றுகூடிய மக்கள், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தில் உயிர் நீத்த தமது பிள்ளைகள், உறவுகள், போராளிகள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தியதன் பின்னர், ஒவ்வொருவரும் தத்தமது கோரிக்கைகள் வலியுறுத்தல்களை கையெழுத்து கடிதமாக எழுதி பிரஜைகள் குழுவினரிடம் கையளிக்க, அவை பாப்பரசரின் செய்தித்தொடர்பாளர் ஊடாக பாப்பரசரின் வத்திக்கான் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் பாப்பரசருக்கு அனுப்பி வைத்துள்ள உணர்வுப்பகிர்வு மற்றும் பரிகார நீதி விசாரணை கோரும் கடிதத்தின் சாரம்:

அதி வணக்கத்துக்குரிய திருத்தந்தையே!

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள உங்களை மனம் விரும்பி வரவேற்பதோடு, அந்த நாளுக்காக காத்திருக்கிறோம். “இங்கு எமது பிள்ளைகள் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்கள் – நாம் எமது பிள்ளைகளை தினமும் தேடியலைந்து கொண்டிருக்கின்றோம்.”
இலங்கைக்கு வருகை தரும் நீங்கள், சிறீலங்கா அரசின் சட்டத்துக்கும் மனிதத்துவத்துக்கும் எதிரான கைதுகள், கடத்தல்கள், தடுத்து வைத்தல்கள், காணாமல் போகச்செய்தல்கள், சித்திரவதைகள், துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள், மனிதகுலப்படுகொலைகள் தொடர்பில் கரிசனையுடன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், எமது பிள்ளைகளின் ஆத்ம பலம் வேண்டியும், அவர்கள் வெகுவிரைவில் எம்மிடம் திரும்பி வந்து சேர வேண்டியும் எமது பிள்ளைகளுக்காக, உறவுகளுக்காக ஜெபிக்கும்படியும் தங்களை கருணையோடு கோருகின்றோம்.

இவ்வாறு கடிதத்தலைப்பிட்டுள்ள அவர்கள் ஒவ்வொருவரும், மேலும் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இழைக்கப்பட்ட வன்கொடுமைகள், துன்பியல் சம்பவங்கள் குறித்தும் “கண் கண்ட சாட்சிகளாக” அந்தக்கடிதங்களில் விவரித்துள்ளனர்.

வடமாகாண சிறப்புச்செய்தியாளர்,
-கவரிமான்-

Tags: , ,

Leave a Reply