ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் “தேசிய மாவீரர் எழுச்சி நாள்”

maveerar2014ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் “தேசிய மாவீரர் எழுச்சி நாள்” உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு! விளக்கெரித்தும் சுடரேற்றியும் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

ஈழ விடுதலைப்போராட்டத்தில் தாம் வரித்துக்கொண்ட இலட்சிய பாதையில் ஆகுதியாகிய ஒப்பற்ற மாவீரத்துறவரங்களை, ஈகிகளை நினைவுகூரும் “தேசிய மாவீரர் எழுச்சி நாள்” நிகழ்வுகள் (கார்த்திகை 27 அன்று) ஈழத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டன.

இராணுவ புலனாய்வாளர்களின் பலத்த கண்காணிப்புகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் செறிவான ரோந்து நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், ஈழத்தின் முல்லைத்தீவு – கிளிநொச்சி- வவுனியா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தமது இல்லங்கள் தோறும், பிரதான வாசல்கள் தோறும் நெய் விளக்கெரித்தும், சுடர் ஏற்றியும் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலித்தனர்.

ஈழ நேரப்படி 6.05 மணிக்கு தத்தமது இல்லங்களின் பூஜை அறைகளில் மணி ஓசை எழுப்பியும், தமது கைப்பேசிகளில் ஏலவே பதிவு செய்து வைத்திருந்த, “எங்கே எங்கே உங்கள் விழிகளை இங்கே திறவுங்கள்… ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்” எனும் உறுதிமொழிப்பாடலையும் ஒலிக்கச்செய்து நினைந்துருகினர்.
கூடவே அடக்குமுறைகள் கட்டுப்பாடுகள் தடைவிதிப்புகளுக்கு மத்தியிலும் இம்முறை ஆலயங்களிலும் 6.05 மணிக்கு பரவலாக மணி ஓசை எழுப்பப்பட்டதையும் செவிமடுக்க முடிந்தது.

வடமாகாண சிறப்புச்செய்தியாளர்,
-கவரிமான்-

Tags: , ,

Leave a Reply