ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கீழ் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் வகையில்
நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பினாங்கு மாநாட்டின் பிரகடன விளக்க பொதுக்கூட்டம் தியாகராய நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வைகோ பேசியது:
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச மீண்டும் வெற்றி பெறுவதற்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து கூறியுள்ளார். இதன் மூலம் பிரதமர் பதவியை மோடி களங்கப்படுத்தியுள்ளார். இதுவரை, எந்த நாட்டு அதிபர் தேர்தலிலும் யாரையும் வெற்றிபெற இந்தியா சார்பில் வாழ்த்தியது இல்லை.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு ஆயுத உதவியோ, பண உதவியோ செய்ய மாட்டோம் என்று அறிவித்தார். அந்த வழியை நரேந்திரமோடி கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பாக உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பிரகடனங்களைப் பினாங்கு மாநாட்டில் நிறைவேற்றினோம்.
இந்த தீர்மானங்களை சட்டப்பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டுகள்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலை நீடித்தால் தமிழகம் தனித்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.
















