மகனுக்கு பிணை பெற்று தரும் வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றினார்: மேர்வின் சில்வா பெருமிதம்

mervin-silvaவெள்ளிக்கிழமை மகனுக்கு பிணையில் விடுதலை பெற்று தருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்றிடம் அவர் இன்று இதனை கூறியுள்ளார்.

பிரித்தானிய பிரஜை மற்றும் அவரது காதலியை இரவு நேர களியாட்டு விடுதியொன்றில் வைத்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேர்வின் சில்வாவின் மகன், மாலக்க சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து மேர்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,

கடந்த செவ்வாய் கிழமை மகனுக்கு பிணை வழங்கவில்லை என்பதால், நான் மிகவும் மனவேதனையுடன் ஜனாதிபதிக்கு எனது வேதனையை தெரிவித்தேன்.

எப்போது மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று ஜனாதிபதி கேட்டார். வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்று நான் சொன்னேன்.

சரி மேர்வின் நீ வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு போ.. நான் பிணை வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி கூறியது போல் மகனுக்கு பிணை கிடைத்து விட்டது.

இவற்றை நீங்கள் இணையத்தளங்களில் எழுத வேண்டாம். ஜனாதிபதி சரியோ தவறோ சொல்வதை செய்யும் தலைவர்.

ரணில், மங்கள போன்றவர்கள் இப்படி மக்களுக்கு உதவி செய்துள்ளனரா?. ரணில், மங்களவிடம் இப்படியான உதவியை கேட்டால், நாங்கள் நீதிமன்ற சுதந்திரத்தை மதிக்கின்றோம். சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கின்றோம் என்று கூறுவார்கள்.

அவர்கள் அடிக்கும் பைலா போன்று சட்டத்தின் ஆட்சி இருந்தால், எனது மகனுக்கு எந்த நாளும் சிறையில்தான் இருக்க நேரிடும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் இருக்கும் பெறுமதியை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்களா? என மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

மகனுக்கு தற்போது பிணை கிடைத்து விட்டது, இனி நீங்கள் எதிரணிக்கு போவீர்களா என இணையத்தள ஊடகவியலாளர் அமைச்சர் மேர்வினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மேர்வின், ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிக்கு சிறந்த சேவையை ஆற்ற முடியும். இதனால், எதிரணிக்கு போகும் திட்டத்தை கைவிட்டு விட்டேன். அரசாங்கம் மாறினால், புதிய அரசாங்கத்துடன் எனக்கு இணக்கத்தை ஏற்படுத்தி கொடுங்கள் என கூறியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply