யாழ்.இளைஞர்களை திருத்துவதற்காகவே தான் மாவீரர் தின சுவரொட்டிகளைத் தயாரித்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட புத்தூர் சந்திப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட விரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
மாவீரர் தின சுவரொட்டிகளை தயாரித்தார் என்ற சந்தேகத்தில் கடந்த 26 ஆம் திகதி மீசாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் தான் மாவீரர் தின சுவரொட்டிகளை தயாரித்தமையை ஏற்றுக்கொண்டார் எனக் கூறிய விமலசேன,
குறித்த இளைஞன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்த விடயங்கள் குறித்தும் தெரிவித்தார். அந்த விடயங்கள் வருமாறு: அண்மைக்காலமாக இளம் சமூகத்தினர் மத்தியில் கலாசார சீர்கேடுகள் அதிகரித்துள்ளன.
அத்துடன் வாள்வெட்டு, குழு மோதல்கள் என்பனவும் அதிகரித்துள்ளன. விடுதலைப் புலிகள் இருக்கின்றனர் எனத் தெரிந்தால் இத்தகைய செயற்பாடுகளில் எவரும் ஈடுபடமாட்டார்கள் எனவே புலிகள் இருக்கின்றனர் எனக் காட்டவே மாவீரர் தின சுவரொட்டிகளைத் தயாரித்தேன் என வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஆனால் அந்த இளைஞர் செய்திருப்பது ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். – என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















