வடக்கு மக்களின் நிலைமை தற்போதும் பயங்கரமாக உள்ளதென தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர்
ராஜித சேனாரத்ன அனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி பொது எதிரணிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய வைத்தியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு புதிய நகர சபை மண் டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்கள் போன்று உலகில் வேறெந்த நாட்டு ஜனாதிபதிக்கும் காணப்படவில்லை. சர்வாதிகாரத்திற்கு சற்றும் குறைவான அதிகாரங்களே காணப்படுகின்றன. தற்போதைய ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் அதிகாரமொன்றில்லை. நீதித்துறைக்கு கீழ்பணிய வேண்டிய தேவையில்லை.
1978ஆம் ஆண்டு முதல் நாம் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றோம். இன்று அதனை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியே அதனை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது. ஜனாதிபதியை மாற்றியபோதும் மீண்டும் அந்த அதிகாரத்துடன் இருக்கும் நாற்காலியில் அமர்பவர் அவ்வதிகாரங்களை கைவிடுவதற்கு தயாராக இல்லை. ஆகவே நாம் இம்முறை அந்த அதிகாரத்தைக் கொண்ட நாற்காலியையே முற்றாக ஒழிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளோம்.
நாம் கூட அறிந்திருக்காத வகையில் பல தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அவை தொடர்பாக ஊடகங்கள் கேள்வியெழுப்பும் போது தான் நாமே அறிந்துகொள்ளும் நிலை காணப்படுகின்றது. அமைச்சரவை யும் பாராளுமன்றமும் இறப்பர் முத்திரைபோன்றே காணப்படுகின்றன. முசொலினி, ஹிட்லர் போன்று செயற்படுகின்றார்கள். தொடாந்தும் இவற்றுக்கு இடமளிக்கமுடியாது. எதிர்வரும் 10ஆம் திகதி எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளோம். அரச சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு ஆகியன சுயாதீனமாக செயற்படுதல், நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்,பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்குதல், அமைச்சரவையில் தலைவராக பிரதமர் உட்பட இலவசக்கல்வி, சுகாதாரம் என்பவற்றை உள்ளடக்கியதாகவும் இந்த நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எமக்கு ஆட்சியிலிருப்பவர்களுடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை. ஆனால் ஜனநாயகத்தை நிலைநாட்டி மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குரிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே நானும் மைத்திரிபால சிறிசேனவும் ஏனையவர்களும் எமது அமைச்சுப்பதவிகளை துறந்துவிட்டு இன்று களமிறங்கியுள்ளோம்.
நாம் பதவிகளுக்காக அரசியலுக்கு வரவில்லை. இந்த நாட்டில் ஜனநாயகம் ஆப த்தில் காணப்படுகின்றது. ஜனநாயகத்தில் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. பேசும் ஜனநாயகம் மற்றும் ஏழைகளின் ஜனநாயகம். இதனைப் பார்த்துக்கொண்டு தொடர்ந்தும் இருக்கமுடியாது. மக்களுக்கான வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும். வடக்கில் உள்ள மக்களின் நிலை இன்னமும் பயங்கரமாகவே உள்ளது. தெற்கிலும் அவ்வாறான நிலைமை காணப்படுகின்றது. ஆகவே அவர்களையும் ஒன்றுபடுத்தி நாம் அனைவருக்கும் சமஉரிமைகளை பெறுவதற்காக செயற்படுவோம். இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபடவேண்டும். சில கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறமுடியாது எனக் கூறினாலும் அக்கட்சிகள் மூலம் குழுக்களை உள்வாங்கி எமது செயற்திட்டங்களை முன்னெடுப்போம். ஆகவே அதனை நிறைவேற்றுவதற்காகவும் சுதந்திரத்தைப்பெறுவதற்காகவும் அனைவரும் ஒன்றுபடவேண்டும். அதற்கான காலம் வந்துள்ளது என்றார்
ரணில் விக்கிரமசிங்க
எமது நாடு சுதந்திரத்தைப் பெற்ற பின்னர் சர்வஜன வாக்களிக்கும் உரிமை இலவசக் கல்வி, சுகாதாரம் ஆகிய உரிமைகள் கிடைத்தன. இன்று இவை நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் எமது அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்துள்ளது. அதுமட்டுமன்றி நீதித்துறை, ஊடகத்துறை சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் இல்லாதொழித்து அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தி தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை, எதிர்காலம் ஆகியவற்றை சீர்குலைத்துள்ளது. இன்று இலவசக்கல்வி, சுகாதாரம் ஆகியன பெயரளவிலேயே இருக்கின்றன. இவற்றுக்காக செலவிடுவதற்கு நிதியில்லாத நிலை மையே காணப்படுகின்றது
சர்வதேச கடன்கள் அதிகரித்துள்ளன. அவற்றை மீளச் செலுத்துவதற்குரிய வழிவகைகள் எதுவுமே கிராமிய,தேசிய ரீதியில் ஆரம்பிக்க ப்படவில்லை.
நாம் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக ஒன்றுபட்டுள்ளோம். மைத்திரிபால வெற்றிபெற்றதும் அதனை செய்வார். அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலில் தனித்தனிக்கட்சிகளாக போட்டி யிடுவோம். பின்னர் நாம் அனைவரும் ஒன்று பட்டு இந்த நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சகல கட்சிகளை ஒன்றுபடுத்தி தீர்வொன்றைக் காண்பதற்காக பாதையில் பயணிப்போம் என்றார்.
















