எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ச அணியாகவும் , மைத்ரிபால – சந்திரிக்கா அணியாகவும் இரு அணிகளாகப் பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கு பிரதானமாக இருக்கும் என்பதால் தற்போதைய சுதந்திர கட்சி உயர்பீடத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய நிலையிலிருப்பவர்களை தமது அணியின் பால் சேர்த்துக்கொள்ள மைத்ரிபால சந்திரிக்கா அணி முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது பதவியில் இருப்பதால் பதவிகள் மூலம் குறித்த நபர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தேர்தல் வெற்றி நிலைமையை மாற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிரணியினர் வெற்றிபெறும் நிலையில் கூட்டு தேசிய அரசாங்கம் ஒன்றே நிறுவப்படும் என இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் ஆட்சியின் பங்காளர்களாக தொடர்வதற்கு ஏற்ப வகையில் முன்ளாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதுவரை அரசை விட்டு வெளியேறாத மேலும் சிலர் விரைவில் இப்புதிய அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே சுதந்திர கட்சி உறுப்பினர்களைக் கொண்டு, அதே பெயரில் எதிர்ப்பு அணியை உருவாக்குவதில் மும்முரம் காட்டப்படுவதாக அறியமுடிகின்றது.
















