தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா – 2 , எல்பா – 5 ஆகிய சிறைக்கூடங்கள் தொடர்பிலான இரகசியங்களை தேடிப் பயங்கரவாத புலனாய்வு பிரிவு நெடுங்கேனி, ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த இரு சிறை கூடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரத்ன, இராணுவ அதிகாரி லக்கி உள்ளிட்ட 80 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள 4 பிரதான சந்தேக நபர்களின் வாக்கு மூலங்கள் நேரில் கண்ட சாட்சி ஒருவரின் வாக்குமூலத்திற்கு அமைவாக ஒட்டுசுட்டான் நெடுங்கேனி பிரதான வீதியிலிருந்து 2 கி. மீ.க்கு அப்பால் உள்ள பெரிய இத்திமடு காட்டில் தடையங்களை தேடி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் தடையவியல் நிபுணர்களும் அரச இராசயன பகுப்பாய்வாளர்களும் விசேட சட்ட வைத்திய அதிகாரி குழுவும் ரஜரட்ட ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் குழுவினரும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ் கட்டுப்பாட்டில் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தடையங்களை தேடிய நடவடிக்கையில் மேலதிக பரிசோதனைகளுக்காக மண் மற்றும் எறிந்த எச்சங்கள் சில இரசாயன பகுப்பாய்வாளர்களால் மேலதிக பகுப்பாய்வு நடவடிக்கைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான நீதிவான் நீதிமன்ற பரிசோதனைகள் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஐ. வகாப்தீனினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரின் உத்தரவிற்கு அமையவே அகழ்வு பணிகளை மேற்கொண்ட தடையங்களை சேகரிக்கும் நடவடிக்கையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நேற்று ஆரம்பித்தனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு சாட்சியாளர் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் நேற்று அகழ்வு பணி இடம்பெற்ற பெரிய இத்தி மடு காட்டுப் பகுதியில் 28 சிவிலியன்களை கண்களை கட்டி சுட்டு கொலை செய்து விட்டு டீசல் சீனியுடன் சேர்த்து எறித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அகழ்வுகளை மேற்கொண்ட இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் எறிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த இடத்தில் உள்ள மண்ணில் டீசல் கலந்துள்ளதை உறுதி செய்துள்ளதுடன் நேற்றைய தினம் எறிந்த எச்சங்கள் சில அவர்களால் மேலதிக பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக பெற்றுக் கொள்ளப்பட்டது.
சுமார் 220 மீற்றர் சதுர அடி பிரதேசம் நேற்று பெரிய இத்தி மடு காட்டில் பகுப்பாய்வு மற்றும் அகழ்வு பணிகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று மற்றும் நாளைய தினம் நெடுங்கேனி பிரதேசத்தின் பிரிதொரு காட்டுப் பகுதியிலும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு பகுதியிலும் அகழ்வு பணிகளை மேற்கொண்டு விசாரணைகளை தொடர பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்விஸ் சிரேஷ்ட சட்ட வைத்திய நிபுணர் உப்பில ஆட்டிகல, அரச இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்தின் பிரதி பகுப்பாய்வாளர் மடவல, தொல்பொருள் ஆய்வகத்தின் வவுனியா பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி பிரியந்த, நில அளவை திணைக்களத்தின் அதிகாரி கல்தேரு உள்ளிட்டவ்கள் விசாரணைகளை நேற்று நடத்தினர்.
இன்றைய தினம் நெடுங்கேனி சமணன் குளம் காட்டுப் பகுதியில் 50 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு எறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் நாளைய தினம் பொலிஸ் பரிசோதகர் ஜெயரத்னம் கொலை தொடர்பிலும் விசேட விசாரணைகளையும் தடய சேகரிப்பும் அகழ்வு பணிகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
















