ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்க்கும் அரசு

tnalogo2ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும், வாக்குறுதிகளும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும், எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கட்சிகளுக்குள் சிக்கல் நிலவுகிறது என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஓர் ஒப்பந்தத்தையும், ஜாதிக ஹெல உறுமயவுடன் இன்னுமொரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டுள்ளனர். ஸ்திரமான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துகொள்ள முடியாத குழப்பநிலையிலேயே தற்போது எதிரணி இருக்கின்றது.

மைத்திரிபால தாம் ஆட்சியமைத்து 100 நாள்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வார். அது மட்டுமல்லாது, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல் மைத்திரிபாலவால் எதையும் செய்யமுடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பிலும் எதிரணியின் கூட்டுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மைத்திரிபால, சந்திரிகா, ரணில் ஆகியோர் அதனை இல்லாது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

எனினும், ஜாதிக ஹெல உறுமய, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றன.

இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஸ்திரமான அரசை உருவாக்காது. ஆனால், இந்நிலையை எப்படியாவது இலங்கையில் ஏற்படுத்திவிட வேண்டும் என்றே மேற்குலக நாடுகள் மற்றும் புலம்பெயர் சக்திகள் எதிரணியின் பின்புலத்தில் இருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திரிகா இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போதும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றாது.

அந்த ஒப்பந்தம் தொடர்பிலும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply