சுற்றுச் சூழல் மாசுக்களைத் தவிர்க்க நாம் இயற்கை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை நிலையத்தை நேற்று திறந்துவைத்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது உரையில்,
அண்மைய சுகாதார திணைக்களத்தின் ஆய்வு அறிக்கையின் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது அதன் காரணமாகவே இங்கே இந்த சிகிச்சை நிலையம் திறந்துவைக்கப்படுகிறது.
தற்போது உலகில் தொற்றும் நோய்களால் இறப்பவர்களைவிட தொற்றாத நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
விவாசாயசெய்கையில் கிருமிநாசினி பாவனை, செயற்கை உரப்பாவனை, குடிநீரிலுள்ள பாரலோகங்கள்
போன்றவை இந்த நோய் ஏற்படக் காரணமென எதிர்வுகூறப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மாசடைந்துள்ள எமது பிராந்தியத்தில் மக்கள் பலவித நோய்களால் பாதிப்படைந்து வருவது கண் கூடாகத் தெரிகின்றது. நாம் எமது பேராசையின் நிமித்தமே இத்தகைய சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையும் இத் தருணத்தில் நாம் மறக்கக் கூடாது.
விவசாய செய்கையில் கிருமிகளைக் கொல்ல எத்தனிக்கும் நாங்கள், முன்னேற்றம் காணச் செயற்கை உரத்தைப் பாவிக்க எத்தனிக்கும் நாங்கள், எம்மை மரணத்தை நோக்கி வரைவாகச் செல்ல உதவி புரிகின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.
2011 ஆம் ஆண்டில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆகும். இவர்களில் 34 பேர் இந்நோயினால் மரணத்தை தழுவியுள்ளனர். 2012 இல் 425 ஆகவும், 2013 இல் 430 ஆகவுள்ள பாதிக்கப்பட்டவர்களின் தொகை இந்த ஆண்டின் 3ஆம் காலாண்டில் 443 ஐ தாண்டியுள்ளது.
எனவே எமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படப் போகும் நோயாளிகளின் தொகை மீண்டும் உயரக் கூடும் என்பதை எம் மக்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் திரை மறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில் எம்மக்கள் வாழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. நீரிலே எண்ணெய். நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருள் பாவனையில் ஏற்றம் இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்பதை என்னால் ஏற்க முடியாது இருக்கிறது.
மக்கள் தங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். எமது வருங்காலச் சந்ததியினர் சுகத்தோடு வாழ நாம் இன்றே சுற்றுச் சூழல் மாசுக்களைத் தவிர்க்க வேண்டும். தகாத வாழ் முறைகளைத் தடை செய்ய வேண்டும். இயற்கை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும். அதற்கு உங்கள் யாவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
















