இந்தியாவின் ஜிசாட்-16 வெற்றி: விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!

rocketஇந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-16 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் ‘இஸ்ரோ’ தொலை தொடர்பு வசதியை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்–16 என்ற செயற்கைக்கோளை தயாரித்தது. இந்த செயற்கைகோள் 12 ஆண்டுகள் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டது. ஜிசாட்-16 செயற்கைக்கோள் இன்று பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கவுரு ராக்கெட் தளத்தில் இருந்து அதிகாலை 2 மணி 10 நிமிடங்களுக்கு ஏரியான் 5விஏ221 என்ற ராக்கெட் மூலம், விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டப்படி செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்றும் செயற்கைக்கோள் இயக்கம் நல்ல நிலையில் இருக்கிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஜிசாட்-16 செயற்கைக்கோள் 3,181 கிலோ எடை கொண்டது. அதில் மொத்தம் 48 தகவல் தொடர்பு டிரான்ஸ் பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை இஸ்ரோ தயாரித்துள்ள செயற்கை கோள்களில் ஜிசாட்–16 மட்டுமே அதிக டிரான்ஸ் பாண்டர்களை கொண்டது. இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்பாண்டர்களின் உதவியால் டெலிவிஷன், வானொலி சேவைகள் பெரிய அளவிலான இணைய தளபயன்பாடுகள், டெலிபோன் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி அதிகாலை 2.08 மணிக்கு ஜிசாட்-16 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விண்ணில் செலுத்துவது கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. வானிலை நிலவரத்தைப் பொறுத்து செயற்கைக்கோள் ஏவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செயற்கைக்கோள் ஏரியான் 5விஏ221 என்ற ராக்கெட் மூலம், விண்ணில் ஏவப்பட்டு, விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி பாராட்டு…
ஜிசாட்-16 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பக்கத்தில், ”ஜிசாட்-16யை வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை நமது விஞ்ஞானிகளை சாரும். தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நமது விண்வெளி திட்டங்களின் முக்கியமான சொத்தாக மாறும், வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு ஜிசாட்-16 நல்ல நிலையில் உள்ளது. ஹஸனில் உள்ள இஸ்ரோவின் மாஸ்டர் கண்ட்ரோல் வசதி, செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

Tags: ,

Leave a Reply