ecஇன்று இலங்கையின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் இரு தரப்பு சிங்கள பேரினவாதிகளின் அறிக்கைகளிலும் சற்று காரசாரமான நிலையில் முன்னுக்கு பின் முரணான நிலை காணப்படுகின்றது.
அது போன்று வடபுலத்தில் கண்ட இடம் எல்லாம் தற்போது ஆயுதங்கள் மீட்பதும், மசகு எண்ணை மீட்பு என்று பல தரப்பட்ட நடவடிக்கைகளில் அரசும் தங்களது புலிப் பூச்சாண்டி காட்டிய வண்ணம் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இந்த இரு சிங்கள பேரினவாதிகளும் அப்பாவி ஈழ மக்களின் அன்றாட வாழ்க்கையிலே தங்களது தேர்தல் பிரசாரங்களை கட்டவிழ்த்துள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து இன்றைக்கு 5 வருடங்கள் கடந்தும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள், வாழ்ந்து வந்த வீடுகள் என்று அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும் தற்போது அங்கு ஆயுதங்கள் மீட்கப் படுகின்றமை கேலிக்குரிய விடயமாக உள்ளது.
சுமார ஐந்து பேருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதக் கணக்கில் வடபுல மக்கள் வாழ்ந்து கொண்டு வரும் போதும் தற்போது புலிப் பூச்சாண்டி காட்டுகின்றது இலங்கை அரசு.
இந்த வேகத்தில் போகுமானால் சில நேரம் இரண்டு பேரினவாதிகளில் ஒருவர் அங்கு என்ன நடந்தது என்பதை சிங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தினால் தேர்தல் களம் யுத்தகளமாக மாறும் நிலை உருவாகும்.
பழைய பழமொழியின் படி “அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்“ என்பது எல்லாம் கடந்து தற்போது தெய்வமும் இன்றே அறுக்கும் நிலைதான் அரசுக்கு உருவாகியுள்ளது.
தங்களது பின்னடைவை கருத்தில் கொண்டு இன்று உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளதை யாவரும் அறிவோம். கடந்த சில நாட்களுக்கு முதல் பாதுகாப்பு அமைச்சர் ஒரு ஊடகத்துக்கு வழங்கிய செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நடந்த போது சகல விதத்திலும் தங்களை விட முன் வந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதில் இருந்து ஒன்று மிகவும் தெளிவாக விளங்குகின்றது, அரசாங்கம் ஆட்டம் கண்டு விட்டது, என்ன பாவம் செய்தோம் என்று தெரியாமல் ஜனாதிபதியின் அனைத்து சிறகுகளும் இன்று நாளுக்கு நாள் கழன்ற வண்ணமே உள்ளது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சிங்கள பேரினவாதிகள் தங்களது சுயநலன் கருதி தாங்கள் தப்பித்துக் கொள்வதற்கு இன்று பல கோணங்களிலும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.
இந்த தேர்தல் இனிவரும் நாட்கள் அனைத்தும் மிகவும் கடினமான நாட்களாகவே இருக்கும். யுத்த வெற்றி ஒரு பக்கமும், யுத்தத்தில் என்ன நடந்தது என்று உண்மைகளை ஒன்று ஒன்றாக கக்கும் கூட்டம் ஒரு பக்கமாகவும் அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையில் விளையாடும் தேர்தலாகவே இது அமைந்துள்ளது.
தற்போதைய நிலைமையைப் பார்த்தால் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சில வேளைகளில் மீண்டும் ஒரு யுத்த நாடகம் ஆடுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றது.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசும் எதிரணியும் தமிழ் மக்களையே பகடைக் காய்களாக பாவிக்கக் கூடும்.
அனைத்து தமிழ் உறவுகளும் வருகின்ற சில வாரங்களுக்கு மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும், அது போன்று மாணவ சமுதாயமும் மற்றவர்களின் கதைகளை கேட்டு தேவையில்லாத வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
மில்லியனுக்கும் பில்லியனுக்கும் துணை போகும் மாயாஜால அரசியவாதிகள் உங்களை தங்களது தேவைகளுக்கு பாவிப்பதன் மூலம் உங்களது எதிர்காலம் பாதிக்க வாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும்.
இன்று எமது மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் எமது சமூகம் கல்வியில் மிக கவனம் செலுத்துவதுடன் வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் எடுத்தக்காட்டாக இருக்க வேண்டும்.
எஸ் கே
















