வவுனியா பண்டாரிக்குளம் “தந்தை செல்வா” பாலர் பாடசாலையில் நேற்று (07.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று) நடைபெற்ற கலைவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்கால வாழ்க்கைக்கு அத்தியாவசியமான கல்வியை எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுக்கு கற்பிக்கின்றோமோ, அதேயளவு முக்கியத்துவம் கொடுத்து எமது பாரம்பரிய கலைகளையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
இன்று அருகிவரும் எமது பாரம்பரிய கலைகளை இன்றுள்ள இளம் சந்ததியினருக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் தமிழர்களுக்கென்றே உரித்தான தனித்துவமான கலைகளும், வரலாறும் அழிவிலிருந்து மீட்கப்படும். இன்று கற்றுக்கொடுப்பதை இந்த மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறிக்கொண்டு சென்று வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஏனெனில் அலங்காரம், ஒப்பனை, பாவ வெளிப்பாடுகளுடன் இன்று இந்த மழலைகள் அரகேற்றிய கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் அநுபவ முதிர்ச்சி மிக்க கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டதைப்போன்ற உணர்வை தந்து எம்மை பிரமிக்கச்செய்தன. அந்தளவுக்கு இந்த மழலைகளை பயிற்றுவித்து பழக்கப்படுத்திய ஆசிரியைக்கும், தமது திறமைகள் மூலம் எம்மை அசர வைத்த மழலைகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியை ஜசோதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌர விருந்தினர்களாக பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் திருமதி சுகனித்தா, நகர பிரதேச முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி லோ.சொரூபி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.ராதிகா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
















